வேலூர்: தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் நேற்று (அக்டோபர் 6) ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஒன்றியத்திற்குள்பட்ட இராமலை ஊராட்சியில் உள்ள 3, 4 ஆகிய வார்டுகளுக்கான வாக்குப்பதிவு, அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் நடைபெற்றது.
மெத்தமாக 1000-க்கும் மேற்பட்டோர் உள்ள இந்த ஊராட்சியில், இரண்டு வாக்குச்சாவடி மையங்கள் கடந்த தேர்தல்களில் அமைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது ஒரே ஒரு வாக்குச்சாவடி மையம் மட்டுமே அமைக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் வாக்குகளைச் செலுத்த முடியாமல் நெருக்கடிக்குள்ளாகினர்.
தாக்குதல்
மேலும் ஒரே ஒரு வாக்குச்சாவடி அலுவலர் மட்டுமே உள்ளதால் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால், மதியம் வாக்களிக்க வந்த பலரும் நீண்ட நேரமாகியும் வாக்களிக்க இயலாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர், இந்தச் செய்தியினைச் சேகரித்துவிட்டு, அருகே உள்ள நடுநிலைப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த 66ஆவது வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்குப்பதிவு நிறைவடைவதை நேரலையில் வழங்கத் தயாராகினார்.
அங்கு, வாக்குச்சாவடிக்குள் முகவராக அமர்ந்திருந்த கிராம ஊராட்சி வார்டு வேட்பாளர் பார்வதி என்பவரின் மகன் திடீரென தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளரை வெளியே போகும்படி மிரட்டியுள்ளார். இதையடுத்து, அவர் செய்தியாளருக்கான அனுமதி அடையாள அட்டையைக் காண்பித்தப் பின்னரும், அவரை வாக்குச்சாவடியில் இருந்த திமுக பிரமுகர் உள்ளிட்ட சிலர் சட்டையைப் பிடித்து வெளியே தள்ளியுள்ளனர்.