வேலூர்: காட்பாடி அடுத்த திருவலம் அருகே இன்று (டிச. 27) காலை சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலில், பெட்டிகளை இணைக்கும் கப்லிங் திடீரென உடைந்து பழுது ஏற்பட்டது. இதனால் ரயில் நிறுத்தப்பட்டது.
இதன் காரணமாக ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் வரை செல்லும் பயணிகள் ரயில், திருவலம் அருகே சுமார் 8.50 மணிக்கு நிறுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து பின்னால் பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற சதாப்தி விரைவு ரயிலும் பாதிவழியில் நிறுத்தப்பட்டது.
இதனையடுத்து ரயில்வே ஊழியர்கள் சரக்கு ரயிலின் பழுதை நீக்கும் பணியில் ஈடுபட்டு, தற்காலிகமாக பழுது சரிசெய்யப்பட்டது. மாற்று வழித்தடத்தில் இருந்து சரக்கு ரயில் புறப்பட்டு சென்றது. பாதை சரியாகியதால் ஜோலார்பேட்டை டூ அரக்கோணம் பயணிகள் ரயில் மற்றும் சதாப்தி ரயில் ஆகியவை சுமார் முக்கால் மணி நேரம் தாமதமாக சென்றன.