வேலூர்: குடியாத்தம் கவுண்டன்ய ஆற்றின் கரையோரம் நடைபெறும் கெங்கையம்மன் சிரசு திருவிழா பெரும் புகழ்பெற்ற திருவிழாவாகும். இதில் தமிழ்நாடு மட்டும் இன்றி அண்டை மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வர். கடந்த 2 ஆண்டாக கரோனா பரவலால் பக்தர்கள் அனுமதி இன்றி நடைபெற்ற திருவிழா, இந்த ஆண்டு கட்டுப்பாடுகள் இன்றி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இத்திருவிழாவில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் சில நிகழ்வுகளும் அரங்கேறின. இன்று (மே 15) காலை குடியாத்தம் பகுதியில் அப்பகுதி இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து கெங்கையம்மன் திருவிழாவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அம்மன் புகைப்படத்துடன் கூடிய தங்கள் படத்தையும் சேர்த்து வாழ்த்து பேனரை வைத்துள்ளனர். அத்தோடு மட்டும் இன்றி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானத்தையும் வழங்கினர்.