திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், ஆலங்காயம் அடுத்த பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன்(35). இவரது மனைவி சாந்திப்பிரியா(25). இவர்களுக்கு ஆறு வயதில் கோமதி என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சீனிவாசன் என்பவருக்கும் ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டு செம்மரம் வெட்டும் பணி செய்து வந்துள்ளனர்.
மேலும் சீனிவாசன் பூங்குளம் கிராமத்தில் இருந்து ஒடுக்கத்தூர் பகுதியைச் சேர்ந்த அசோகன் என்பவருக்கு, கூலி ஆட்களை அனுப்பி வைப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த மாதம் பூங்குளம் பகுதியில் இருந்து சீனிவாசன் ஏழு பேரை கூலி வேலைக்காக அசோகனிடம் அனுப்பி வைத்துள்ளார். அவர்களை அசோகன் ஆந்திரா மாநிலத்திற்கு செம்மரம் வெட்டுவதற்காக அழைத்துச் சென்று, அங்கு வெட்டப்பட்ட செம்மரக்கட்டைகளை தமிழ்நாட்டிற்குக் கடத்தி வந்து, அவற்றை விற்பனை செய்த பின்னர், கூலி வழங்குவதாகக் கூறி அவர்களை ஊருக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், 10 நாட்களாகியும் கூலி வழங்காததால் செம்மரம் வெட்டும் கும்பல் ஏழு பேரும் சீனிவாசனிடம் கூலி வாங்கித் தருமாறு, வற்புறுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சீனிவாசன் பணம் பெற்றுத் தர தாமதமானதால் நேற்று இரவு அந்த ஏழு பேர் கொண்ட கும்பல் சீனிவாசன் வீட்டிற்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சீனிவாசனுக்கும் அந்த கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் முற்றி அடிதடி ஏற்பட்டுள்ளது. அப்போது சீனிவாசன் மனைவி சாந்திப்பிரியா, சீனிவாசனின் தாயார் இருவரும் அதைத் தடுக்க முயன்ற போது, அந்தக் கும்பல் தள்ளி விட்டதில் சாந்திப்பிரியா கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
பின்னர் அந்த கும்பல் சீனிவாசனை காரில் கடத்திச் சென்றுள்ளனர். பின்னர் மயங்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்த சாந்திப்பிரியாவை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு சாந்திப்பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாகக் கூறிவிட்டனர்.
பின்னர் உடற்கூறாய்வுக்காக சாந்திப்பிரியா வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.