வேலூர்: புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் (51) என்பவர் தமிழ்நாடு முழுவதும் சரவணா ரியஸ் எஸ்டேட் குரூப் ஆப் கம்பெனியை நடத்தி வருகிறார். இதில் வேலூர் மாவட்டத்தில் ஒரு இடத்தில் நிலத்தை வாங்கியுள்ளார். அந்த இடத்தை அவருக்கு தராததால் பணத்தை திருப்பி கேட்டுள்ளார். இதில் காட்பாடி விடுதலை சிறுத்தைகள் மாநில பொறுப்பாளர் நீலசந்திரகுமார் அலுவலகத்திற்கு சரவணன் நேற்றிரவு அழைத்து வரப்பட்டார். இந்நிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் சரவணன் மர்மமான முறையில் அங்கு இறந்து கிடந்துள்ளார்.
இது குறித்து விருதம்பட்டு காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த மர்ம மரணம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா நேரடியாக விசாரணையை துவங்கியுள்ளார்.
காட்பாடி விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் மரணம்!! இதுகுறித்து பாண்டிச்சேரி சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில், சரவணணை நிலம் வாங்கியதில் பணத்தை திருப்பி அளிப்பதாக கூறி அழைத்துள்ளனர். அதனை நம்பி சரவணன் வேலூர் வந்துள்ளார். பின்னர் அவரை துன்புறுத்தி கையொப்பம் பெற்றுள்ளனர். இது திட்டமிட்ட கொலை. இதில் விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் நீல சந்திரகுமார் உள்ளிட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர். அரசியல் பின்னனி உள்ளதால் காவல்துறை சரியான கோணத்தில் விசாரிக்கவில்லை என குற்றம்சாட்டினார்.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா செய்தியாளர்களிடம் கூறுகையில், ரியல் எஸ்டேட் அதிபர் மர்மமான முறையில் டால்பின் டவர்ஸ் பில்டிங்கில் இறந்துகிடந்தார். இதுகுறித்து நாங்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகனத்தில் செல்லும் போது காவலரின் மனைவியிடம் செயின் பறிப்பு!!