வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டில் உள்ள துலுக்கான் தெருவில் நேற்று(நவ.08) மாலை வேலூர் மாவட்ட தாசில்தார் கோட்டீஸ்வரன் தலைமையில் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் துணை ஆய்வாளர் முத்தமிழ் ஆகியோர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள வீட்டில் வைத்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரோந்து பணியில் இருந்தவர்களுக்கு தகவல் கிடைத்தது. இந்நிலையில், அந்த வீட்டிற்கு சென்று பார்த்த போது இரண்டு வீடுகளில் சுமார் 320 மூடைகளுடன் 16 டன் அளவிலான ரேஷன் அரிசி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக கடத்தல் தொழிலில் ஈடுபட்ட வெங்கடேசன் (49) என்பவரை பிடித்து உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவலர்கள் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர் கரோனா ஊரடங்கிற்கு முன்பு ஓட்டுநராக (Acting Driver) இருந்ததும், ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் நான்கு மாதங்களாக இத்தொழிலை செய்து வருவதாகவும் ஒப்புக்கொண்டார். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் வெங்கடேசனை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரியில் கரோனா பிந்தைய நல்வாழ்வு மையத்தில் சிடி ஸ்கேன் வசதி