வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக மூன்று தனி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே உள்ள வேலூர் மாவட்டம் தவிர்த்து, திருப்பத்தூர், ராணிப்பேட்டை என இரண்டு புதிய மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு, அதற்கான தொடக்க விழா பணிகள் நடைபெற்று வருகிறது.
நாளை (நவ.28) தேதி காலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவும், பிற்பகல் ராணிப்பேட்டை மாவட்டம் தொடக்க விழாவும், மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.
விழா பந்தல் அமைக்கும் பணியை கே.சி. வீரமணி பார்வையிட்டார் இதற்காக, ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய்த் தடுப்பு மருந்து ஆராய்ச்சி வளாகத்தில் விழா பந்தல் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. வணிக வரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி, வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், நேரில் சென்று விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்டார்.
பின்னர், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்களுக்கான திட்ட வரைபடங்கள் குறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்தார்.
இதையும் படிங்க: தென்காசி மாவட்டத்தை உதயமாக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி!