சேலம் மாவட்ட ரயில்வே சிக்னல்களில் ரயில்கள் நின்றபோது, கொள்ளையர்கள் புகுந்து பயணிகளிடம் நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து சேலத்தை தொடர்ந்து அருகில் உள்ள மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்கள், ரயில்களில் கொள்ளையர்களின் அத்துமீறலை தடுக்க பாதுகாப்பை பலப்படுத்துமாறு ரயில்வே டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டிருந்தார்.
ரயில் கொள்ளையைத் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு! - Railway police
வேலூர்: சேலம் மாவட்டத்தில் ரயில்வே சிக்னல்களில் ரயில்களில் நின்றபோது, கொள்ளையர்கள் புகுந்து பயணிகளிடம் கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்தால் வேலூர் மாவட்ட ரயில் நிலையங்களில் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து ரயில் நிலையங்கள், ரயில்வே சிக்னல்களில் காவல் துறையினரின் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில்வே காவல் துறையினருடன் தமிழ்நாடு காவல் துறையினரும் இணைந்து 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் கிளித்தான்பட்டறை ஜாப்ராபேட்டை ஆகிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய காவல் துறையினரின் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஓடும் ரயில்களிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் உள்ளதாகவும், பயணிகளின் நலன் கருதி சந்தேகப்படும்படியாக அடையாளம் தெரியாத நபர்கள் யாராவது ரயிலில் ஏறினால் அவர்களை சுட்டுப்பிடிக்கவும் காவல் துறை உயர் அலுவலர்கள் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.