வேலூர்:வேலூரில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம், கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவரும், சுதந்திரப் போராட்டத் தியாகியுமான சங்கரய்யா மறைவுக்கு கட்சி சார்பில் இரங்கல் தெரிவித்தார். பின் தொடர்ந்து பேசிய அவர், நாட்டின் பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக பிரதமராக வர வேண்டும் என்ற நோக்கத்தில், வேலூர் மக்களவைத் தொகுதியில் மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக கூறியுள்ளார்.
ஏற்கனவே 52 முகாம்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து 50 மருத்துவ முகாம்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், இந்த மருத்துவ முகாம்கள் மூலம் இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு அறுவை சிகிச்சைகளை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம், வேலூர் மக்களவைத் தொகுதியை நோயற்ற பகுதியாக மாற்ற முடிவு செய்து, மருத்துவ முகாம்களை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். இதேபோல், வேலைவாய்ப்பு முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு முகாம்களையும் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் குறித்து அவர் பேசுகையில், “தற்போது நடைபெற்று வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 4 இடங்களில் பாஜக வெற்றி பெறும் என்பது புதிய நீதிக்கட்சியின் கருத்தாகும். ‘இந்தியா’ கூட்டணி என்பது இந்தியாவில் எங்கும் இல்லாத நிலையில்தான் உள்ளது. தேர்தலுக்குப் பிறகு யார் பிரதமர் என்று அறிவிக்கப்பட்டாலே, அந்த கூட்டணி இல்லாமல் போய்விடும். அதேநேரம், பிரதமர் நரேந்திரமோடி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராவது உறுதி.
தமிழகத்தில் நாளுக்குநாள் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. காவல் துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, கொலை இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும். மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிய ஜிஎஸ்டி வரித் தொகைகளை திருப்பி அளித்து வருகிறது.