வேலூர்:தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் வேலூர் மாவட்டத்திலும் லேசாகத் தொடங்கிய மழை மாலை நேரங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், சாலைகள், தெருக்கள் என அனைத்து இடங்களிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், தோட்டுப்பாளையம் பச்சையபாஸ் துணிக்கடை அருகே உள்ள பாதாளச் சாக்கடையில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் அதிலிருந்து கழுவுநீர் வெளியேறி, மழை நீரோடு கலந்து சாலை முழுவதும் தேங்கியுள்ளது. இதனால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சி.எம்.சி மருத்துவமனைக்குச் செல்பவர்கள் மற்றும் பழைய பேருந்து நிலையத்திற்குச் செல்பவர்கள் என அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால், இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே தற்போது கோடை மழை மாலை வேலைகளில் பெய்து வரும் சூழலில், ஏற்கனவே சேதமான சாலைகள் அடிக்கடி வெள்ளக்காடாக மாறிவிடுகின்றன எனக் குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், சமீபத்தில் இப்பகுதியில் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில், பல இடங்களில் முழுமையாக இந்த பணிகள் நிறைவடையவில்லை எனவும் மழைக்காலங்களில் கழிவு நீர் வெளியேறுவது வாடிக்கையாக உள்ளது எனவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் கொசுத் தொல்லை மற்றும் கடும் சாக்கடை கழிவு நீர் துர்நாற்றத்துடன் வாழவேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவிக்கும் மக்கள், இதனால் பல்வேறு நோய் தொற்றுக்கும் தாங்கள் ஆளாகுவதாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறியுள்ள அப்பகுதி மக்கள், இனியாவது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்துக் கழிவு நீரை அகற்றி வருங்காலத்தில் கழிவு நீர் சாலையில் தேங்காதவாறு கால்வாய்களைத் தூர்வாரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, வடதமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது.
குறிப்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் நாளை (ஜூன் 20) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:TN Rain Update: தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!