வேலூர்: வேலூரை சீர்மிகு நகரமாக மாற்றும் திட்டம் 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் வேலூரை மேம்படுத்தும் பணிகள் 2015இல் தொடங்கின.
வேலூரின் அத்தனைப் பகுதிகளிலும் உள்ள தெருக்களும், சீர்மிகு நகரம் திட்டத்தின்கீழ் பாதாள சாக்கடைக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்களால் அலங்கோலமாகக் காட்சியளிக்கின்றன.
ஸ்மார்ட் சிட்டி என்ற பேரில் வீதிகள் நாசம்
வெட்டப்பட்ட சாலைகளை மீண்டும் சமன் செய்யாமலும், தோண்டும்போது வெளியேறிய மணலை ஆங்காங்கே அப்படியே விட்டுவிட்டும் சென்றுள்ளதால், சாலைகள் படுகுழியுடனும், வீடுகளில் தூசு ஏறியும் காட்சியளிக்கின்றன.
இந்நிலையால் தெருக்களின் உள்ளே அவசர காலத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம்கூட வர முடியாத நிலையில் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். அண்மையில் பெய்த மழையால் தெருக்கள் சேறும், சகதியுமாகக் கிடக்கின்றன.
ஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்து பொதுமக்களின் கருத்து இதையடுத்து பல இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் உடைந்து, தேங்கியுள்ள மழைநீருடன் கலந்து கொசு உற்பத்தி அதிகரித்து துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பொருமுகின்றனர்.
செவி சாய்க்காத நிர்வாகம்
இது தொடர்பாக பலமுறை மாநகராட்சியிடம் மனு அளித்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றும் ஆதங்கத்துடன் பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் வேலூர் மக்கள் இப்பணிகளால் படும் இன்னல்களை பல ஊடகங்கள் செய்தியாகக் காட்டியுள்ளன.
அதில் "சீர்மிகு திட்டப் பணிகளின் பேரில் சீரற்று கிடக்கும் வேலூர்!" என்ற தலைப்பில் நமது ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் கடந்த ஜனவரி மாதம் செய்தி வெளியிட்டிருந்தது.
இருப்பினும் மாவட்ட நிர்வாகம் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கிட்டத்தட்ட ஓராண்டு காலம் ஆகியும் நமது ஊடகத்தில் காட்சிப்படுத்தப்பட்ட பல பகுதிகள் தற்போதும், அதே நிலையில்தான் உள்ளது என்பது வேதனைக்குரிய ஒன்றாகும்.
விழிப்புணர்வு தேவையா?
இந்நிலையில் இந்திய நாட்டின் 75ஆவது விடுதலை நாளை நினைவுகூரும் வகையிலும், சீர்மிகு நகரத் திடத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஆசாதிகா அம்ரித் மஹாட்சவ் (Azadika Amrit Mahotsav) என்ற திட்டத்தின் வாயிலாக கடந்த அக்டோபர் 1ஆம் தேதி அன்று காலை 6.30 மணி அளவில் வேலூர் பாகாயம் பகுதியில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இதில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி ஆணையர் சங்கரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
சீர்மிகு நகரத் திட்டத்தினை முறையாக மேற்கொள்ளாமல், தாமதித்துவரும் அலுவலர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி தேவையா? அதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவையா எனப் பொதுமக்கள் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
அக்டோபர் ஒன்றாம் தேதி நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியைப் பார்த்த மக்கள் செய்வதறியாமலும், குழப்பத்திலும் நிற்கின்றனர். மேலும் இது குறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளரிடம், அவர்கது கருத்துகளைத் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இன்று உலக ஆசிரியர் நாள்