வேலூர்:நாடு முழுவதும் இன்று (நவ.12) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடும் வகையில், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தீயணைப்புத்துறை உத்தரவின் பேரில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி, தீ தடுப்புக் குழு சார்பில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.
இது குறித்து வேலூர் மாவட்ட தீயணைப்புத் துணை இயக்குநர் அப்துல் பாரி, ஈடிவி பாரத்துக்கு அளித்த சிறப்பு பேட்டியில், “வேலூர் மாவட்டத்தில் விபத்தில்லா தீபாவளியைக் கொண்டாடும் வகையில், பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிக்க தீயணைப்புத் துறையினர், பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி உள்ளனர். பொதுமக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதவாறு பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
சிறுவர்கள் பட்டாசுகளை திறந்த வெளியில் பெற்றோர் முன்னிலையில் வெடிக்க வேண்டும். பட்டாசு வெடிக்கும்போது அருகில் தண்ணீர் வைத்துக் கொள்ள வேண்டும். குடிசைப் பகுதிகளில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். கண்ணாடி பாட்டிலில் பட்டாசு வைத்து வெடிப்பதை தவிர்க்க வேண்டும். காலில் செருப்பு அணிந்து, பருத்தி ஆடை அணிந்து பட்டாசுகளை வெடிக்க வேண்டும். முகத்தை நேராக வைத்துக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கக் கூடாது. உயிர் விலைமதிப்பற்றது. எனவே, நாம் பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
மேலும், மக்களின் பாதுகாப்பு கருதி 24 மணி நேரமும் வேலூர் மாவட்டத்தில் தீயணைப்புத் துறையினர் பணியில் உள்ளனர். பட்டாசு வெடி விபத்தின்போது அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், அந்தந்த பகுதியில் உள்ள தீயணைப்புத் துறை எண் 101 அல்லது 112 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால், உடனே தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வருவார்கள். மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் கூடும் முக்கிய இடங்களில் 9 கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என அவர் கூறினார்.
இது குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் கூறியதாவது, “தீபாவளி பண்டிகை இன்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 4 நாட்களாகவே வேலூர் நகரம் களைகட்டியுள்ளது. ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள், பட்டாசு இனிப்பு பலகாரக் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. மேலும், லாங்கு பஜார், நேதாஜி மார்க்கெட், மெயின் பஜார் என மார்க்கெட் பகுதிகள் மக்கள் நெரிசலுடன் காட்சி அளிக்கின்றன.