வேலூர்:இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றிய நாளை முன்னிட்டு, நேற்றைய முன்தினம் (நவ.26) விடுதலை சிறுத்தை கட்சியின் வேலூர் மாவட்டச் செயலாளர் பிலிப் மற்றும் மாநகர பகுதி செயலாளர் இளையராஜா ஆகியோரின் தலைமையில், அண்ணா சாலையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு உள்ள விசிக கொடிக் கம்பம் புதுப்பித்து வைக்கப்பட்டது.
இதனையடுத்து, முன் அனுமதி பெறாமல் கொடி கம்பத்தைப் புதுப்பித்து நட்டு வைத்ததாகக் கூறி, காவல்துறையினர் இரவோடு இரவாக கொடி கம்பத்தை அகற்றி உள்ளதாகத் தெரிகிறது. இதனை அறிந்த விசிகவினர், நேற்று (நவ.27) காலை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு திரண்டனர். மேலும், இதில் 50க்கும் மேற்பட்ட கட்சியினர் அண்ணா சாலையில் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், தகவல் அறிந்த வேலூர் தெற்கு காவல் ஆய்வாளர் பேபி, வடக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், கொடிக்கம்பத்தை ஒப்படைக்க வேண்டும் அல்லது மீண்டும் அதே இடத்தில் அமைக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.