குழப்பத்தில் சிக்கித் தவிக்கும் திருவள்ளூர் பல்கலைக்கழகம்.. வேலூரில் நடப்பது என்ன? வேலூர்: காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் தமிழ்நாடு அரசின் திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைகழகத்தின் கீழ் திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிட்டதில் பல குளறுபடிகள் நிகழ்ந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளது. ஏற்கனவே தேர்வு எழுதிய 3200 மாணவர்களுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண் போடப்பட்டு முடிவுகள் வந்ததால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் பல்கலைக்கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மேலும் பல மாணவர்களின் தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.
இந்த நிலையில் வேலூர் ஊரிசு கல்லூரியில் எம்.எஸ்.சி கணித மாணவர்கள் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் எம்.எஸ்.சி கணித மாணவர்கள் ஒருவர் கூட தேர்வுக் கட்டணம் செலுத்தவில்லை என தேர்வு முடிவு காட்டியது. ஆனால் பல்கலைகழகத்திற்கு மாணவர்களிடம் வசூலித்த தொகையை கல்லூரி செலுத்துவிட்டது. இந்த நிலையில் கல்லூரி செலுத்திய தொகையை பல்கலைக்கழகம் கண்டு கொள்ளாமல் முடிவுகளை வெளியிட்டுள்ளதால் எம்.எஸ்.சி கணித மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருவள்ளூவர் பல்கலைக்கழகத்தில் நிகழும் குளறுபடிகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டும் என கல்வியாளர்கள் ஏற்கனவே கூறி வருகின்றது. இது தொடர்பாக முன்னாள் பேராசிரியர் குமார் கூறியது, "இந்த பல்கலைகழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்வில் மாணவர்களின் நலனை பாதிக்கும் வகையில் பல குளறுபடிகள் நடந்துள்ளது. முக்கியமாக தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், தேர்ச்சி பெறவில்லை எனவும், தேர்ச்சி பெறாதவர்கள் தேர்ச்சி பெற்றதாகவும் அறிவிப்பு திருவள்ளூவர் இணைவு பெற்ற கல்லூரிகளில் வெளியாகியுள்ளது.
இது குறித்து கேட்டதற்கு துணை வேந்தரும், பல்கலைக்கழக தேர்வு கட்டுபாட்டாளரும் மாறி மாறி இதற்கு பேராசிரியர்கள் தான் பொறுப்பு என கூறுகின்றனர். ஆனால் சமீபத்தில் கல்லூரியில் இருந்து விலகிய மாணவன் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என தேர்வு முடிவு வெளியாகிறது. மேலும் தேர்வுக்கட்டணம் செலுத்தியும், செலுத்தவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இது போன்ற சம்பவங்களையெல்லாம் பார்க்கும் போது திருவள்ளூவர் பல்கலைக்கழகம் செயல்படுகிறதா? இல்லையா? என மக்கள் மத்தியில் கேள்வி எழுந்து வருகிறது. இப்படிப்பட்ட செயல்களால் மாணவர்கள் நலனில் அக்கரை காட்டும் பேராசிரியர்கள் மிகவும் வேதனையடைகின்றனர். மேலும் வேலூரில் தனியாக பல்கலைக்கழகம் வேண்டும் என போராடி வாங்கினேன். ஆனால் தற்போது நிகழ்வதை எல்லாம் பார்த்தால், சென்னை பல்கலைகழகத்துடனே இருந்திருக்கலாம் என்ற எண்ணம் தோன்றுகிறது. ஆகையால் இது போன்று நிகழும் பிரச்னைகள் குறித்து, முதலமைச்சரும், உயர்கல்வித்துறை அமைச்சரும் தலையிட்டு மாணவர்களின் நலன் காக்க வேண்டும்" என கோரிக்கை வைத்துள்ளார்.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தந்தை மறைவு: ஈபிஎஸ் நேரில் சென்று ஆறுதல்!