வேலூரில் 'பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் பயிற்சி' சேர்க்கை முகாம் வேலூர்:வேலூரில் மத்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறையின் சார்பில், பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் பயிற்சி சேர்க்கை முகாம் இன்று (அக். 9) நடைபெற்றது. இந்த பயிற்சி சேர்க்கை முகாமில், எட்டு முதல் பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்கள், ஐடிஐ முடித்த இளைஞர்கள், ஃபிட்டர், மெஷினிஸ்ட், மோட்டார் மெக்கானிக், வெல்டர் சீட் மெட்டல் எலக்ட்ரீசியன், கார்பன்டர், சிவில் மற்றும் ஓயர் மேன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கானப் பயிற்சியில் சேர ஏராளமான இளைஞர்கள் பங்கேற்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்தப் பயிற்சி முகாமில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களும் பங்கேற்றனர். தொடர்ந்து மாணவர்களின் ஆர்வம் மற்றும் திறன் அறிந்து, நிறுவனங்களின் தேவைக்கேற்ப இளைஞர்களை தேர்ந்தெடுத்தனர். இதுகுறித்து திறன் பயிற்சி மையத்தின் உதவி இயக்குனர் காயத்ரி கூறுகையில், "பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுனர் பயிற்சியில் சேருவதற்கான முகாமில் பங்கேற்கும் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்ட பின்பு, நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எட்டாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களும் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம். இந்த புகாமில் ஒரு வருட காலம் மாணவர்களுக்கு முழுமையாகப் பயிற்சி அளிக்கப்படும். ஆய்வகத்தின் மாணவர்கள் செய்ததை தொழிற்சாலைகள் செய்யலாம். மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக 8 ஆயிரத்தில் இருந்து 15 ஆயிரம் ரூபாய் கொடுக்கப்படும். தொழிற்சாலையில் பணிகளை மேற்கொள்ளும் போது, மாணவர்களுக்கான அனைத்து சலுகைகளும் வழங்கப்படும். ஒரு வருட காலம் பயிற்சி முடித்தவுடன், மாணவர்களுக்கு என்.ஏ.சி சான்றிதழ் அளிக்கப்படும். அவர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்கும் வகையில் பல நிறுவனங்கள் முன் வந்துள்ளனர்.
இந்த தொழில் நிறுவனங்களின் பயிற்சி முகாமில் பங்கு பெறுவதன் மூலம், தனியார் நிறுவனங்கள் மட்டுமல்ல, அரசு நிறுவனங்களிலும் வேலை வாய்ப்பு கிடைக்கும்" என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகினர் பயிற்சியில் சேருவதற்கு, இப்படியான முகாம் நடத்தப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக முகாமில் கலந்து கொண்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க:காவிரி விவகாரம்: தமிழக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்! அதிமுக ஆதரவு.. பாஜக வெளிநடப்பு!