வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (நவம்பர் 22) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மக்கள் வரி பணத்தில் நடத்தப்படும் அரசு விழா மேடையில் அரசியல் பேசி, கூட்டணியையும் உருவாக்கி, திமுகவை ஏக வசனத்தில் வசைபாடிவிட்டு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்றார். இது ஜனநாயகத்தின் நெறிமுறைகளை அழிக்கக்கூடிய செயல்.
2ஜி குறித்து பேசுவதற்கு முன் அமித்ஷா செய்தித் தாள் படிக்க வேண்டும். அந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதை உள்துறை அமைச்சர் அறிவாரா?. சமீபத்தில், பாரத் நெட்(Bharat Net) திட்டத்துக்கு இரண்டாயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. அதற்கு டெண்டர் விடுவதில் மிகப்பெரிய கோளாறு இருந்ததால், மத்திய அரசுக்கு அடிபணியாத சந்தோஷ் என்ற ஐஎஎஸ் அலுவலர் ராஜினாமா செய்து கொண்டார். இது நடந்ததும் அத்திட்டத்தையே மத்திய அரசு நீக்கிவிட்டது.