வேலூர்: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே வேலங்காடு கிராமத்தில் உள்ள பொற்கொடியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புஷ்ப ரத ஏரித்திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. கரோனா பாதிப்பால் கடந்த இரண்டு ஆண்டுகளாக திருவிழா நடைபெறாத நிலையில், இன்று (மே 10) நடைபெற்றது. வல்லண்டராமம், அன்னாச்சிபாளையம், வேலங்காடு, பனங்காடு உள்ளிட்ட கிராம மக்கள் டிராக்டர் மற்றும் மாட்டு வண்டிகளில் தென்னை ஓலைகளை கட்டிக் கொண்டு கோயிலுக்கு வந்தனர்.
பின்னர் ஆடு, கோழிகளை ஏரியில் பலியிட்டு அங்கேயே சமைத்து சாப்பிட்டனர். மேலும் அதை அங்கு வந்த பொதுமக்களுக்கும் பரிமாறினர். குடும்பம் மற்றும் விவசாயம் செழிக்கவும், கால்நடைகள் நோயின்றி வாழவும் வேண்டி பொம்மைகளை நேர்த்திக்கடனாக அம்மனுக்கு செலுத்தி வழிபாடு நடத்தினர். வேலூர் மாவட்டம் மட்டுமின்றி கிருஷ்ணகிரி, தருமபுரி, சித்தூர், சென்னை, திருவண்ணாமலை, பெங்களூரு ஆகியப் பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
இதைத் தொடர்ந்து அம்மனை அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வைத்து மேள தாளங்கள் முழங்க, ரதத்தை தூக்கி வந்து ஏரியில் வைத்து வழிபாடு நடைபெற்றது. ஏரியில் பாதியளவு நீர் இருந்த நிலையிலும் பொதுமக்கள் ஏரித் திருவிழாவைக் கொண்டாடினர்.