கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியில் இருந்தபோது காவல் உதவி ஆய்வாளர் நெல்சன் என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள், எம்பிக்கள் குரல் கொடுக்கவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், வேலூரில் பேசுகையில் இந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மனநிலை சரியில்லாமல் பேசுவதாக தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் இன்று மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறையின் நாடாளுமன்ற நிலைக்குழுவினர் விவசாயிகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. குழு உறுப்பினர் என்ற முறையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் இதில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பிறகு அவர் நிருபர்களிடம் பேட்டியளிக்கும்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், சிலைகளை அசிங்கப்படுத்துவது சேதப்படுத்துவது என்பது சில பைத்தியக்காரர்கள் செய்யும் வேலை ஆகும். அவர்களைப் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம். அவர்களை காவல்துறை பார்த்துக் கொள்ளும். அவர்களுக்கு 10 ஆண்டுகள் தண்டனை கொடுத்தால் இது நடக்காது என்றார்.
விவசாயிகளுடனான கலந்துரையாடல் பற்றிய கேள்விக்கு, விவசாயிகளுக்கான சேவை எண் என 1551 என்ற பொது தொலைபேசி நம்பர் கொடுத்துள்ளனர். நான் நாங்குநேரியில் விவசாயிகளை சந்தித்தபோது ஒரு நம்பர் கொடுத்தார்கள். ஆனால் அந்த நம்பரை தொடர்பு கொண்டால் இரண்டு நாளாக எடுக்கவில்லை. தற்போது அந்த நம்பரில் எடுத்துப் பேசுகிறார்கள். இதில் விழிப்புணர்வு இல்லை என்பதுதான் குற்றச்சாட்டு. நான் 150 ஏக்கர் விவசாயம் செய்து வருகிறேன், எனக்கே தொடர்பு எண் தெரியவில்லை.