LKG படிக்கும் 3 வயது சிறுவன் மீது ஆசிரியர் தாக்குதல் - போலீசார் விசாரணை வேலூர்:LKG படிக்கும் 3 வயது சிறுவனை இரக்கமின்றி ஆசிரியர் தாக்கியதில் சிறுவனுக்கு மூக்கில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், குழந்தைக்கு கல்வி கட்டணத்திற்காக மட்டும் தொடர்பு கொண்டு பேசும் தனியார் பள்ளி நிர்வாகம், சிறுவனுக்கு அப்பள்ளி ஆசிரியரால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு சிறுவன் பள்ளியில் துடித்ததை மறைக்க முயன்ற சம்பவமும் அரங்கேறியுள்ளது.
பேரணாம்பட்டு தனியார் பள்ளியில் பயிலும் LKG மாணவனை ஆசிரியர் அடித்ததால் மூக்கில் ரத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி குழந்தையின் பெற்றோர் பேரணாம்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வி.கோட்டா சாலையில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளியில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். பேரணாம்பட்டு அடுத்த கோட்டைச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் மற்றும் தீபம் தம்பதியரின் 3 வயது குழந்தை விக்ரம் அருள் இந்த தனியார் பள்ளியில் LKG படித்து வருகிறான்.
இந்த நிலையில் வழக்கம்போல், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் குழந்தை விக்ரம் அருள் வீட்டிற்கு வந்துள்ளான். பின்னர், குழந்தையின் மூக்கில் ரத்தம் வந்திருப்பதை கண்டு குழந்தையின் தாயார் தீபம் அதிர்ச்சியடைந்துள்ளார். என்ன நடந்தது என கேட்டதற்கு, வகுப்பு ஆசிரியர் தன்னை அடித்தார் எனவும் அதனால், தனது மூக்கில் ரத்தம் வந்ததாகவும் சிறுவன் விக்ரம் அருள் கூறியுள்ளான்.
இதனைத்தொடர்ந்து உடனடியாக, சிறுவன் பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக இன்று (அக்.20) அனுமதித்தனர். இதனிடையே, மருத்துவமனையில் சிறுவனின் உறவினர்கள் எனப் பலரும் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சிறுவனிடம் பள்ளியில் நடந்தவற்றை கேட்டறிந்த பேரணாம்பட்டு போலீசார் சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே, தன்னை வகுப்பு ஆசிரியர் கம்பினால் தாக்கியதால் தான் மூக்கில் ரத்தம் வந்ததாக சிறுவன் விக்ரம் அருள் கூறியுள்ளான். ஏற்கனவே, பள்ளியில் இதுபோல தனது மகனை தாக்கியதாகவும், அப்போது படிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. தயவு செய்து அடிக்க வேண்டாம் என கூறிவிட்டு வந்த நிலையில், இப்போது தனது மகனை இப்படி மூர்க்கத்தனமாக தாக்கிய ஆசிரியர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தயார் தீபம் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க:மருந்து கொடுக்காமல் 17 வயது சிறுமிக்கு பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்ட் சிகிச்சை.. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் சாதனை!