வேலூரை அடுத்த புதுவசூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் ராஜா என்கிற வசூர் ராஜா (36). பிரபல ரவுடியான இவர் மீது பல கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரது கூட்டாளி காட்பாடியைச் சேர்ந்த நாகப்பன் மகன் வெங்கடேசன் (34). தலைமறைவாக இருந்த இவர்களை வேலூர் மாவட்ட காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், வேலூர் சத்துவாச்சாரி பகுதியில் பெயின்ட் கடை நடத்தி வரும் ஓ.எஸ்.பாஷா என்பவரிடம் தொடர்ந்து பணம் கேட்டு ரவுடி ராஜா மிரட்டல் விடுத்து வந்திருக்கிறார். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு செல்போனில் தொடர்புகொண்ட ராஜா, 3 லட்சம் ரூபாய் பணம் தரவேண்டும் என்றும், இல்லையெனில் அவரது குடும்பத்தை கொலை செய்துவிடுவதாகக் கூறி மிரட்டியிருகிறார்.
பல நாட்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று பாஷாவும், அவரது கடையில் வேலை செய்யும் சலீம் ஆகிய இருவரும் தனியார் தோல் தொழிற்சாலைக்குச் சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சொகுசு காரில் சென்ற ராஜா, ஓட்டுநர் வெங்கடேசன் ஆகியோர் சேர்ந்து பாஷா மற்றும் சலீமை வழிமறித்து வெள்ளிக்கிழமை ரூ.5 லட்சம் பணத்தை தயார் செய்து வைக்காவிடில் குடும்பத்துடன் கொலை செய்து விடுவதாக மிரட்டியிருக்கின்றனர். மேலும், பாஷா வைத்திருந்த 20ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துச் சென்றுள்ளனர்.