வேலூர்: காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடை எண் 1இல், நேற்றைய முன்தினம் (மே 3) மாலை 3 மணிக்கு சேலம் மாவட்டம் அத்தியாம்பட்டி பகுதியைச் சேர்ந்த சுந்தரி என்ற மூதாட்டி சேலம் செல்வதற்காக அமர்ந்திருந்தார். அப்போது அடையாளம் தெரியாத பெண் ஒருவர், இரண்டு மாத பெண் குழந்தையை வைத்திருக்கும்படி மூதாட்டி சுந்தரியிடம் ஒப்படைத்துள்ளார்.
ஆனால், நீண்ட நேரம் ஆகியும் அப்பெண் வராததால் சந்தேகம் அடைந்த சுந்தரி, குழந்தையை காட்பாடி காவல் நிலையத்துக்கு எடுத்து வந்து ஒப்படைத்துள்ளார். தொடர்ந்து, சுந்தரி தெரிவித்த அடையாளங்களை வைத்து ரயில் நிலையம் மற்றும் சுற்றுப்புறம் முழுவதும் தேடிப் பார்த்தும் குழந்தையை கொடுத்துச் சென்ற பெண்ணை கண்டறிய முடியவில்லை.
எனவே, குழந்தையின் நலன் கருதி, அக்குழந்தை வேலூர் அடுக்கும்பாறை அரசு மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பாக காட்பாடி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, மூதாட்டியிடம் மூன்று மாத குழந்தையை கொடுத்துச் சென்ற அடையாளம் தெரியாத பெண்ணை தேடுவதற்கு, காட்பாடி இருப்புப்பாதை காவல் ஆய்வாளர் சித்ரா தலைமையில், உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இவர்கள் ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில், சம்பந்தப்பட்ட பெண் காட்பாடி பேருந்து நிலையத்தில் இருந்து, காட்பாடி பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து ஆரணி செல்லும் பேருந்தில் ஏறி பயணம் செய்தது தெரிய வந்துள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக, சிசிடிவி கேமரா மூலம் கிடைத்த புகைப்படத்தை வாட்ஸ் அப், ட்விட்டர், பேஸ்புக் ஆகியவற்றில் உள்ளூர் காவல் நிலையம் மூலம் அனைவருக்கும் தெரியப்படுத்தி உள்ளனர்.
இதன் அடிப்படையில், காட்பாடி இருப்புப்பாதை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் காவலர் ஒருவரின் நண்பரான முன்னாள் ரானுவ வீரர், குழந்தையை கொடுத்துச் சென்ற பெண் வேலூர் மாவட்டம் மோத்தக்கல் கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வி (27) என தகவல் அளித்துள்ளார். இதன் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.