வேலூர்: குடியாத்தம் நகர், வேலூர், காட்பாடி, கே.வி.குப்பம், பள்ளிகொண்டா உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருட்டு நடைபெற்று வந்தது. இதனால் குடியாத்தம் நகரில் பேருந்து நிலையத்தில் அருகில் குடியாத்தம் நகர போலீசார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி நேற்று இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி விசாரணை மேற்கொள்ள முயன்றபோது அவர் இருசக்கர வாகனத்தில் தப்பித்துச் சென்றார். அதன் பின்னர், போலீசார் பல கிலோ மீட்டர் தூரம் அவரை துரத்திச் சென்று பிடித்தபோது அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திருட்டு வண்டி என்பது தெரியவந்தது.
அவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இவர் குடியாத்தம் நடுப்பேட்டையை சேர்ந்த தரணி என்பதும் இவர் குடியாத்தம் பள்ளிகொண்டா, ராணிப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் விலை மதிப்புள்ள ராயல் என்ஃபீல்டு புல்லட் 350, ஸ்ப்ளெண்டர், யூனிகார்ன் போன்ற விலை உயர்ந்த நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களை இவர் திருடி வந்து குடியாத்தம் அருகேயுள்ள கல்லூர் பகுதியை சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் ஞானவேல் என்பவரிடம் கொடுத்து, இவர்கள் இந்த இருசக்கர வாகனங்களை ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்று வாகனங்களை விற்றதும், திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.