வேலூர்:வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டையை அடுத்த சலமநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர், விஷ்ணு சரவணன். இவர் இந்திய ராணுவத்தில் சுபேதாராக பணியாற்றி வருகிறார். தற்போது மும்பையில் அவர் வசித்து வருகிறார். ஆறு வயது முதல் விஷ்ணு சரவணன், மும்பை கொலாபாவில் உள்ள ராணுவப் படகு முனையில் தனது தந்தை ராமச்சந்திரன் சரவணன், விண்ட்சர்ப் செய்வதை அடிக்கடி பார்த்து வந்திருக்கிறார்.
அவரது தந்தை, தேசிய அளவில் மட்டுமே பதக்கங்களை வென்றிருக்கிறார். புதன்கிழமை காலை விஷ்ணு சரவணன், சீனாவின் நிங்போவில் உள்ள NBX படகோட்டம் மையத்தில், லேசர் ஸ்டாண்டர்ட் என்று அழைக்கப்படும் ஆண்களுக்கான ICLA 7 நிகழ்வில் வெண்கலப்பதக்கத்தை வென்றார்.
இது குறித்து விஷ்ணுவின் தந்தை சரவணன் கூறுகையில், "ஆறு வயது முதலே விஷ்ணுவை நான் படகு பயிற்சி செய்யும்போதெல்லாம் என்னுடன் அழைத்துச் செல்வேன். அதை, விஷ்ணு பார்த்துக் கொண்டிருப்பான். விஷ்ணுவுக்கு ஒன்பது வயதாகும்போது, ஒரு ஆப்டிமிஸ்ட் பாய்மரப்படகில் பயிற்சி அளித்தேன் என்றார்.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, விஷ்ணு 10 முதல் 15 வயதுக்குட்பட்டோருக்கான டிங்கியான ஆப்டிமிஸ்ட் உடன் பயிற்சி பெற்றார். இரண்டு அல்லது மூன்று மணி நேரம் அரபிக்கடலில் பயணம் செய்வார். விஷ்ணு, 2016ஆம் ஆண்டில் இளைஞர் தேசிய பட்டம் உள்பட மொத்தம் 32 தேசிய பதக்கங்களை வென்றார். அவர் நான்கு ஜூனியர் உலக மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியிருக்கிறார். ஆனால், அவரது முதல் சர்வதேச பதக்கம் 2016ஆம் ஆண்டு ஹாங்காங்கில் கிடைத்தது.