வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் கூட்டம் மற்றும் பொறுப்பாளர்கள் பதவியேற்பு விழா மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.
இதில் வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், தமிழ்நாடு ஓட்டல் சங்கத்தின் மாநிலத் தலைவர் வெங்கடசுப்பு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத் தலைவர் விக்கிரமராஜா, "உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் வணிகர்களை மிரட்டி லஞ்சம் பெறுவதிலேயே குறியாக உள்ளனர். பொருள்கள் தயாரிப்பு நிறுவனங்களில் சோதனை நடத்தி அவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதில்லை.
இணையதள வர்த்தகத்தால் சில்லறை வணிகத்தில் இந்திய வியாபாரிகள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே மத்திய அரசு இணையதள வர்த்தகத்தை தடைசெய்யக்கோரி வரும் 6ஆம் தேதி டெல்லியில் கூடி அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிக்கவுள்ளோம்.
வணிகர் சங்க தலைவர் விக்கிரமராஜா செய்தியாளர்கள் சந்திப்பு நெகிழி ஒழிப்பைப் பொறுத்தவரை வியாபாரிகள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது ஏற்புடையதல்ல. நாடு முழுவதும் நெகிழியை தடைசெய்ய வேண்டும், அப்போதுதான் அது சாத்தியமாகும். இதைக் காரணம்காட்டி வணிகர்களின் கடைக்குச் சீல்வைப்பது சரியானதல்ல. சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் உள்ள பிரச்னைகள் குறித்து மத்திய அரசிடம் எங்களின் கோரிக்கையை எடுத்துச் சொல்லியிருக்கிறோம். இது குறித்து நடவடிக்கை எடுக்கும்வரை அபராதமோ மேல் நடவடிக்கையோ எடுக்கக் கூடாது" எனக் கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பூச்சிக்கொல்லி பயன்படுத்தினால் அபராதம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு...விவசாயிகள் எதிர்ப்பு!