தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மலிவான விலையில் நஞ்சில்லா காய்கறிகள்; விவசாயிகளுக்கு விடியலைத் தந்த 'நம் சந்தை' - nam sandhai at vellore

இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட விவசாய பொருள்களை விற்பனை செய்ய உருவாக்கப்பட்ட 'நம் சந்தை' மூலம் விவசாயிகளும், நுகர்வோரும் பயனடைந்து வருகின்றனர். இதுகுறித்த செய்தித் தொகுப்பு...

நம் சந்தை
நம் சந்தை

By

Published : Feb 3, 2021, 9:03 PM IST

Updated : Feb 4, 2021, 8:45 PM IST

இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டு மக்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. செயற்கை உரம், செயற்கை பூச்சிக் கொல்லிகளால் மனித உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று உணர்ந்த மக்கள், இயற்கை முறையில் விவசாயம் செய்து அதன் மூலம் கிடைக்கக்கூடிய காய், கனிகளை தேடிச் சென்று வாங்குவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

வேலூரில் உள்ள இயற்கை விவசாயிகள், அவர்கள் தோட்டங்களில் விளைந்த பொருள்களை விற்பனை செய்ய ஏதுவான தளம் இல்லை என்று திணறி வந்த நிலையில் தான், அவர்களுக்கு விடியலைத் தரும் விதமாக 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6ஆம் தேதி, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் 'நம் சந்தை'யைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின், மகளிர் திட்டத்தின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மாநில ஊரக - நகர்புற வாழ்வாதார இயக்கம், இயற்கை விவசாயிகளுடன் இணைந்து இதனை செயல்படுத்தி வருகின்றனர்.

இயற்கை விவசாயம்

இயற்கையாக விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழ வகைகள், கீரை வகைகள், நாட்டுகோழி முட்டை, நாட்டுச்சர்க்கரை, பனங்கிழங்கு, மாப்பிள்ளை சம்பா, கிச்சிலி சம்பா, கருப்பு கவுனி போன்ற அரிசி வகைகள், தானிய வகைகளும் இங்கு விற்பனைக்கு கிடைக்கின்றன. மற்ற இடங்களை காட்டிலும் இங்கு கிடைக்கும் காய்கறிகள், பழ வகைகள் சுவையாக இருப்பதால் நம் சந்தைக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

விவசாயம், எளிய மருத்துவம் தொடர்பான புத்தகங்கள்

இதுதவிர இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள், நுகர்வோர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் சுழலும் சூழல் நூலகமும் (Revolving Eco library) அமைக்கப்பட்டுள்ளது. விவசாயம், எளிய மருத்துவம் தொடர்பான பல புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன.

விவசாயிகளுக்கு விடியலைத் தந்த 'நம் சந்தை'

மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை வேலூரில் பூமாலை வளாகத்தில் நம் சந்தை நடைபெறுகிறது. தற்போது வரை 53 வாரங்களாக நம் சந்தை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நம்சந்தையின் ஒருங்கிணைப்பாளரான செந்தமிழ் செல்வன் கூறுகையில், "கரோனா பேரிடர் சூழலிலும் தக்க பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி நம் சந்தை நடைபெற்றது. இக்காலகட்டத்தில் மக்களுக்கு உதவிடும் நோக்கில் வீடுகளுக்கே சென்று காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டது.


பல படித்த இளைஞர்கள் தன்னார்வலர்களாக நம் சந்தையினை ஆதரித்து வருகின்றனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சந்தையில் நெகிழி (பிளாஸ்டிக்) பைகள் அனுமதிக்கப்படுவதில்லை. நுகர்வோர்களையே துணிப்பைகள் கொண்டு வர அறிவுறுத்தி உள்ளோம். தற்போது வரை 170 விவசாயிகள் இங்கு பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் 40-50 விவசாயிகள் பங்கேற்கின்றனர். வாரத்திற்கு சுமார் 50 ஆயிரத்திற்கு விற்பனை செய்கின்றனர். மாதம் ஒருமுறை விவசாயிகளுக்காக கூட்டம் சந்தை வளாகத்திலேயே நடைபெறுகிறது" என்றார்.

மலிவான விலையில் நஞ்சில்லா காய்கறிகள்

இயற்கை விவசாய பொருள்களை நம் சந்தையில் விற்பனை செய்து பயனடைந்து வரும் விவசாயி சதானந்தம் கூறுகையில், "கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இங்கு என்னுடைய பொருள்களை விற்பனை செய்து வருகிறேன். நுகர்வோரும் விரும்பி வாங்கி செல்கின்றனர், எங்களுக்கும் நல்ல விலை கிடைக்கிறது. இயற்கையாக விவசாயம் செய்வதனால் சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களில் இருந்து வந்தும் வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.

மலிவான விலையில் நஞ்சில்லா காய்கறிகள்; விவசாயிகளுக்கு விடியலைத் தந்த 'நம் சந்தை'
மற்றொரு விவசாயி விக்னேஷ் கூறுகையில், பன்னிரண்டு வகையான பாரம்பரிய தானியங்கள் பயிரிட்டு வருகிறேன். இவற்றில் மாப்பிள்ளைச் சம்பா, கிச்சிலி சம்பா, கருப்பு கவுனி போன்றவை அதிகம் விற்பனையாகிறது. முதலில் போதிய வரவேற்பு இல்லாமல் தவித்து வந்தேன். நெல் கொள்முதல் நிலையத்திலும் வாங்க மறுத்தனர்‌. தற்போது "நம் சந்தை" மூலம் நல்ல வரவேற்பு உள்ளது" என்கிறார்.

உதவி பேராசிரியர் சுடர்விழி கூறுகையில், "உற்பத்தியாளருக்கும், நுகர்வோருக்குமான "நம் சந்தை" திட்டத்தை மக்களிடையே கொண்டு செல்வதில் இன்னும் சில சிக்கல்கள் உள்ளன. அரசு சாரா அமைப்புகளும், சுய உதவி குழுக்களும் இணைந்து யாருக்கும் எவ்வித பாதகமும் இன்றி "நம் சந்தையை" சந்தைப்படுத்துவதற்கான யுக்திகளை வகுத்தால் இன்னும் சிறப்பாக செயல்படும். இங்கு வரக்கூடிய அனைத்துப் பொருள்களும் விற்பனை ஆகக்கூடிய அளவிற்கு சந்தைகளை பெருக்க வேண்டும், கிளைகள் பலவும் திறக்கப்பட வேண்டும்" என்றார்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் இதுபோன்ற சந்தை தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட வேண்டும் என்பதே விவசாயிகள், நுகர்வோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.



Last Updated : Feb 4, 2021, 8:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details