திருப்பத்தூர் மாவட்டம், கோணாப்பட்டு ஊராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பலமுறை வட்டார வளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது.
இந்நிலையில், குடிநீர் முறையாக வழங்கக் கோரி 200க்கும் மேற்பட்ட மக்கள் காலி குடங்களுடன் திருப்பத்தூர் - நாட்றம்பள்ளி செல்லும் சாலையில் கோணாப்பட்டு அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கேட்டு கண்ணீர் வடிக்கும் மக்கள் இதனைத் தொடர்ந்து கிராமிய காவல்துறை சமரச பேச்சுவார்த்தை நடத்தி, இன்னும் இரண்டு நாட்களில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று கூறியதன் அடிப்படையில் அனைவரும் கலைந்துச் சென்றனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பேசுகையில், ' குடிக்கத் தண்ணீர் இல்லை. இது தொடர்பாக பலமுறை புகாரளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. தண்ணீர் குறித்து கேட்டால், எங்களைப் பெண்கள் என்றும் பாராமல் அசிங்கமாகத் திட்டுகிறார்கள்' என வேதனைப் பட்டார்.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி முறைகேடு: பகீர் பின்புலம்... முக்கியக் குற்றவாளி தலைமறைவு!