திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தாதனவலசை ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளில், தமிழ்நாடு அரசு சார்பில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ் ஒரு பயனாளி 35 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கறவை மாட்டினை வாங்க முடியும்.
இந்நிலையில் அப்பகுதி கால்நடை மருத்துவர், கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் ஒன்றிணைந்து ஆந்திர மாநிலம் பலமனேரி பகுதியிலிருந்து மலிவான விலைக்கு மாடுகளை வாங்கி அவற்றை இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளுக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதவிர, பயனாளிகளிடமிருந்து 1,000 ரூபாயும் வழிப்போக்கு செலவுக்கு பணமும் வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
People protested at Tirupattur சில மாடுகளில் சுமார் 100 கிராம் அளவிலான பாலை மட்டுமே கறக்க முடிவதாகவும் மிகவும் மெல்லிய உடல்கொண்ட மாடுகளை வாங்கிக் கொடுத்துள்ளதால் பாலுடன் ரத்தம் கலந்துவருவதாகவும் இத்திட்டத்தின் கீழ் மாடுகளைப் பெற்ற அப்பகுதி மக்கள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், 50-க்கும் மேற்பட்ட அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து ஜோன்றம்பள்ளி வழியாக திருப்பத்தூர் செல்லும் சாலையில் அரசுப் பேருந்தினை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபடுவதை அறிந்து அப்பகுதிக்கு வந்த திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த காவல் துறையினர், விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: சத்துணவில் அழுகிய முட்டைகள் :ஆட்சியரின் திடீர் ஆய்வால் அம்பலமானது!