வேலூர் என்று சொன்னாலே பல்வேறு வரலாற்றுச் சிறப்பம்சம் கொண்ட ஒரு நகரம் ஆகும். சிப்பாய்க் கலகம் முதல் தேசியக்கொடி உருவாகிய இடம், அகழியுடன் உள்ள கோட்டை என அடுக்கிக்கொண்டே போகலாம். வேலூரில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பல்வேறு வரலாற்றுஸ் சிறப்புகள் கொண்ட மாவட்டம் தான், வேலூர் மாவட்டம். இருப்பினும், வரலாற்றுச் சிறப்பு மட்டும் அல்லாமல், வெயிலுக்கும் பெயர் போன ஊராகத் திகழ்கிறது, வேலூர். அதனை தான் வெயிலூர் என்று மற்றொரு பெயரிட்டு அழைப்பார்கள்.
பொதுவாகவே வேலூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஏப்ரல், மே மாத காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால், வேலூரில் பிப்ரவரி மாதத்திலேயே வெயிலின் தாக்கம் தொடங்கிவிட்டது. எப்போதுமே அதிகமாக வெயிலின் தாக்கம் இருக்கக்கூடிய மாநகரமான வேலூரில், இந்த ஆண்டின் பருவ மழை பொய்த்து போனதால், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து காலை 10 மணிக்கே உச்சி வெயில் வாட்டி எடுத்து வருகின்றது. வேலூரில் கடந்த சில நாட்களாக 102 டிகிரி, முதல் 105 டிகிரி என தினமும் வெப்பத்தின் அளவு படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகின்றது.
பகல் நேரங்களில், அதிகபட்சமாக வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதால், வீட்டின் உள்ளே அனல் காற்றும் புழுக்கமும் அதிகரிக்கிறது. இதனால் கர்ப்பிணிகள், வயதானவர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வெயிலில் வேலை பார்க்கும் மக்கள் என பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
அதேபோல் வேலூரில் தர்பூசணி, விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. வெயிலின் தாக்கத்தில் இருந்து சற்று இளைப்பாறவும் நமது உடம்பில் நீர் குறையும்போது தர்பூசணி சாப்பிடுவதால், நீர்ச்சத்து கிடைக்க உதவுகிறது.