வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இந்நிலையில் வேலூர் ஆட்சியர் அலுவலகம் சென்ற அதிமுக கூட்டணி வேட்பாளரான புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரத்திடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது தமிழ்நாடு வணிகவரி; பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி. வீரமணி உடனிருந்தார்.
'திமுகவுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை!'
வேலூர்: நடைபெறவுள்ள தேர்தலில் திமுகவுக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்று வேலூர் மக்களவைத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஏ.சி. சண்முகம், "மத்தியில் ஆட்சி மாறும் - மாநிலத்தில் ஆட்சி மாறும் என்று திமுகவினர் கூறினார்கள். ஆனால் பாஜக வலுவான ஆட்சி அமைத்துள்ளது. மக்கள் தெளிவாக உள்ளனர். இந்தத் தேர்தல் எதற்காக நிறுத்தப்பட்டது? அதற்கு யார் காரணம்? என்பதை மக்கள் சிந்தித்து வைத்துள்ளார்கள்.
திமுகவுக்கு மீண்டும் வாக்களிக்க மக்கள் தயாராக இல்லை என்பதால் வரும் தேர்தலில் அக்கட்சிக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள். நாங்கள் வெற்றிபெற்றால் வேலூர் மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்ய முடியும். யார் நல்ல வேட்பாளர் என்பதை ஆகஸ்ட் 5ஆம் தேதி மக்கள் நல்ல தீர்ப்பு அளிப்பார்கள்" என்று தெரிவித்தார்.