சென்னைமற்றும் விழுப்புரத்தில் தமிழ்நாடு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடிக்குச் சொந்தமான ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்றைய தினம் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 5 மணி நேரத்துக்கும் மேல் தொடர்ந்து அமலாக்கத்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது. கணினிகளிலிருந்து கோப்புகள் அழிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடைபெற்றது.
இதற்கிடையே, விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீட்டில் இருக்கும் பீரோ மற்றும் லாக்கர்களுக்கு சாவி இல்லை என அமைச்சரின் உதவியாளர் கூறியதால் பூட்டு திறக்கும் நபரை அழைத்துச் சென்று அதனை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், மாற்று சாவி கொண்டு வீட்டில் உள்ள பீரோ லாக்கர்களை திறந்து சோதனையிட அமலாக்கத்துறை முயற்சி செய்தனர். ஆனால், முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. இதனால், பீரோ மட்டும் லாக்கர்களை உடைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விழுப்புரம் - திருப்பான் ஆழ்வார் தெருவில் உள்ள வீடு, விக்கிரவாண்டியில் உள்ள பொறியியல் கல்லூரி உள்பட ஒன்பது இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையை நடத்தினர். விழுப்புரம் வீட்டில் சாவி இல்லாததினால், அங்கு சோதனையைத் தொடங்குவதில் சுமார் அரை மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. சோதனையின்போது சைதாப்பேட்டையில் உள்ள வீட்டில் பொன்முடியும், அவர் மகன் பொன் கெளதம சிகாமணி எம்.பி.யும் இருப்பதாக கூறப்படுகிறது.