வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனையொட்டி அரசியல் கட்சியினர் தங்களது பரப்புரையை வேகப்படுத்தியுள்ளனர். அந்தவகையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒடுகத்தூர் பேருந்து நிலையத்தில் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “ஏ.சி.சண்முகம் இந்தத் தொகுதிக்கு செல்லப்பிள்ளை. அதிமுக தொண்டர்களுக்கான கட்சி.
ஓ.பன்னீர் செல்வம் பரப்புரை ஸ்டாலின் உண்மையை சொல்லி வாக்கு கேட்டு ஆட்சியை பிடிக்க முயற்சிக்க வேண்டும். அதை விடுத்து பொய்யை மட்டுமே சொல்லி ஆட்சியை பிடிக்க நினைக்கிறார் அது ஒருபோதும் நடைபெறாது. அதிமுக அரசு நூறுநாள் வேலைத்திட்டத்தை வழங்காது என்று அவர் கூறுகிறார். ஆனால் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியில் அதிமுக அரசு நூறு நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தும் அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
இந்த வருடம் பருவமழை சரிவர பெய்யாததால் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கையில் நமது தொப்புள்கொடி உறவுகளை கொன்றது அப்போதிருந்த திமுக-காங்கிரஸ் அரசு. இதையெல்லாம் நீங்கள் எண்ணிப்பார்த்து இந்தத் தேர்தலில் நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும்” என்றார்.