வேலூர்:காட்பாடி அருகே 55 புத்தூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அசரீர்மலை முருகன் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அக்கிராம மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஜூலை 11) மனு அளித்தனர்.
காட்பாடி வட்டம், 55 புத்தூர் கிராமத்தில் அசரீர்மலை முருகன் கோயில் அமைந்துள்ளது. ஊர் பொதுக்கோயிலான இக்கோயிலை அறக்கட்டளை முறைப்படி பதிவுத்துறையில் பதிவு செய்து கிராம மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், '55 புத்தூர் கிராம பொதுக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தும் விதமாக வட்டாட்சியர், போலீசார் திங்கள்கிழமை கோயில் சாவியை ஒப்படைக்கும்படி கட்டாயப்படுத்தினர். இந்த கோயில் கோபுரம், பிரகாரம், மலைப்பாதை, படிக்கட்டு உள்ளிட்ட அனைத்தும் கிராம மக்களின் நன்கொடை மூலமாகவே உருவாக்கப்பட்டதாகும்.
இதையும் படிங்க: Viral Video:கையில காசு... பையில சர்டிஃபிகேட் - லஞ்சம் வாங்கும்போது வீடியோவில் லாக் ஆன அரசு ஊழியர்
இந்த நிலையில், எங்கள் கிராம கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்துவதற்கு உரிமை இல்லை, அதனைக் கிராம மக்கள் அனுமதிக்கவும் இல்லை. எனவே, 55 புத்தூர் கிராமத்தில் உள்ள அசரீர்மலை முருகன் கோயிலை அறநிலையத்துறை கையகப்படுத்தும் நடவடிக்கையைக் கைவிட்டு கிராம மக்கள் சுதந்திரமாக வழிபாடு செய்ய அனுமதிக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர். இம்மனுவைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், இப்புகார் தொடர்பாக விசாரணை அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.
இதனிடையே, வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இந்து முன்னணி கோட்டத்தலைவர் மகேஷ் தலைமையில் 100-க்கும் மேலான 55 புத்தூர் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆலயத்தை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் எடுக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.
முன்னதாக, இந்து முன்னணி வேலூர் கோட்ட தலைவர் மகேஷ் தலைமையிலான கிராம மக்கள் சத்துவாச்சாரி மேம்பாலத்தின் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரையில் பேரணியாகச் சென்றனர். இதனைத்தொடர்ந்து அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது முக்கியமானது - குமரி ஆட்சியர் அட்வைஸ்!