வேலூர்:நாட்டின் சுதந்திரத்துக்காக உயிர் தியாகம் செய்த வீரா்களை நினைவுகூறும் வகையில் ‘எனது மண், எனது தேசம்’ இயக்கம் துவங்க பிரதமா் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். அந்த இயக்கத்தின் கீழ் ‘அமுத கலச யாத்திரை’ நடத்தப்பட்டு
வருகிறது.
அதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 7,500 சிறிய அளவிலான பானைகளில் மண் சேகரிக்கப்பட்டு, அந்தப் பானைகளில் உள்ள மண் அனைத்தும், டெல்லி தேசிய போர் நினைவிடத்துக்கு அருகே ஒன்றாகக் கொட்டப்பட்டு, மரக்கன்றுகள் நட்டு வைக்கப்படும்.
இது ‘ஒரே இந்தியா, தலைசிறந்த இந்தியா’ என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் சுதந்திரப் போராட்ட வீரா்களை நினைவுகூறும் வகையில், இந்த பூங்காவனம் அமைக்கப்பட உள்ளது. அதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம், காட்பாடி அருகே கரசமங்கலம் என்ற கிராமத்தில், ‘எனது மண், எனது தேசம்’ என்ற இயக்கத்தின் சார்பில் மண் சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இப்பகுதியில் மண் சேகரிக்கும் நிகழ்ச்சியினை இந்தியன் வங்கியின் கிராமப்புற வங்கித் துறை பொது மேலாளர் சந்திரசேகரன் துவக்கி வைத்தார். இந்தியன் வங்கியின் கிராமப்புற வங்கித் துறை பொது மேலாளர் சந்திரசேகரன் தலைமையில் மகளிர் குழுவினர், அமுத கலசங்களில் மண் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக மகளிர் குழுவினர் உறுதி மொழியையும் எடுத்துக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மண் சேகரிப்பதை குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்திலும் ஈடுபட்டனர். இதனை அடுத்து மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பின்னர், அந்த கிராமத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கிய சந்திரசேகரன், அவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தார்.