தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

Vellore Aavin: 2 பால் விநியோகிப்பாளர்களின் ஒப்பந்தம் ரத்து.. தனியார் காவல் நிறுவனத்துக்கு நோட்டீஸ்!

வேலூர் ஆவின் பால் திருட்டு விவகாரத்தில், இரண்டு பால் விநியோகிப்பாளர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதோடு, இது குறித்து தனியார் காவல் நிறுவனத்துக்கு நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Jun 8, 2023, 7:10 PM IST

வேலூர்:ஒரே பதிவெண்ணில் இரு வேன்களை இயக்கி வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து தினமும் 2,500 லிட்டர் பால் திருடப்பட்ட விவகாரத்தைத் தொடர்ந்து (Vellore Aavin milk theft case), இரு பால் விநியோகிப்பாளர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே பதிவெண் கொண்ட இரு வேன்களை ஆவின் வளாகத்துக்குள் அனுமதித்தது தொடர்பாக தனியார் காவல் நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு இன்று (ஜூன் 8) நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

வேலூர் சத்துவாச்சாரியிலுள்ள ஆவின் பால் பண்ணையில் கடந்த சில நாள்களாக உற்பத்தி செய்யப்படும் பால் பாக்கெட்டுகளுக்கும் விற்பனை செய்யப்படும் பாலுக்கும் இடையே தினமும் சுமார் 2,500 லிட்டர் அளவுக்கு வித்தியாசம் இருப்பதை அறிந்த அதிகாரிகள் இதுதொடர்பாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், கடந்த ஜூன் 6ஆம் தேதி மதியம் வேலூர் ஆவின் பால்பண்ணைக்கு பால் பாக்கெட்டுகள் ஏற்றிச் செல்ல வந்த வேன்களில் இரண்டு வேன்கள் ஒரே பதிவெண்ணில் (டிஎன் 23 ஏசி 1352) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து உடனடியாக, புறப்பட தயார் நிலையில் இருந்த அந்த இரு வேன்களை பால் பாக்கெட்டுகளுடன் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், டிஎன் 23 ஏசி 1352 என்ற எண் கொண்ட வேன் சத்துவாச்சாரி, அலமேலுமங்காபுரம், பாறைவீதியைச் சேர்ந்த தினேஷ்குமார் என்பவருக்குச் சொந்துமானது என்பதும், போலியாக அதே பதிவு எண் பலகை வைத்து இயக்கப்பட்ட மற்றொரு வேன் சத்துவாச்சாரி, ரங்காபுரம், புதுத் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சிவக்குமார்(24) என்பவருக்குச் சொந்தமானது என்பதும் தெரியவந்தது.

இதுகுறித்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நள்ளிரவு ஆவின் பால் பண்ணை வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சிவக்குமார், அவரது ஓட்டுநர் விக்கி இருவரும் போலி பதிவெண் கொண்ட வேனை ஓட்டிச் சென்றனர். தடுக்க முயன்ற ஆவின் உதவி பொது மேலாளர் (விற்பனை) சிவக்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுதொடர்பாக, ஆவின் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில், சத்துவாச்சாரி போலீசார், போலி பதிவெண் கொண்ட வாகனத்தின் உரிமையாளர் சிவக்குமார், அதன் ஓட்டுநர் விக்கி ஆகியோர் மீது இரு பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, புகார் தெரிவிக்கப்பட்ட பால் பாக்கெட் விநியோகிப்பாளர்களான தினேஷ்குமார், சிவக்குமார் ஆகியோருடன் ஏற்படுத்தப்பட்டிருந்த பால் விநியோக ஒப்பந்தத்தை ஆவின் நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இவர்கள் மூலம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்ட பகுதிகளுக்கு அரசு வாகனங்கள் மூலம் பால் விநியோகம் செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரே பதிவெண் கொண்ட இரு வேன்களையும் ஆவின் பால் பண்ணை வளாகத்துக்குள் அனுமதித்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் காவல் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதனிடையே, புதன்கிழமை நள்ளிரவு முதல் வேலூர் ஆவின் பால் பண்ணையில் இருந்து பால் பாக்கெட்டுகளை ஏற்றுக் கொண்டு வெளியே செல்லும் வாகனங்கள் அனைத்தும் கூடுதல் பணியாளர்கள் நியமித்து முழுமையாக பரிசோதனை செய்த பிறகே வெளியே அனுப்பப்பட்டது. பால் பாக்கெட்டுகள் செல்லும் ஊர், முகவர்களின் விவரம், அவை சரியான நபரிடம் சென்று சேருகிறதா என்பதையும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அத்துடன், ஆவின் நிறுவனத்திலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அதேசமயம், இந்த பால் திருட்டு சம்பவம் ஆவின் விற்பனை பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்கத்தின் நிறுவன தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: Vellore Aavin: ஒரே பதிவு எண்ணில் வந்த இரு வாகனங்கள்; இரவோடு இரவாக எடுத்துச் சென்ற உரிமையாளர்

ABOUT THE AUTHOR

...view details