வேலூர்:எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் டிக்கெட் இல்லாமல் 2 நாட்களாக கழிவறைக்குள் பூட்டிய படி, பட்டினியோடு பயணம் செய்த வட மாநில இளைஞரை அரக்கோணத்தில் ஆர்பிஎப் போலீசார் கதவை உடைத்து மீட்டனர். ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து (வண்டி எண் 18189) எக்ஸ்பிரஸ் ரயில் கேரள மாநிலம் எர்ணாகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட். 20) காலை 5.30 மணிக்கு டாட்டா நகரில் புறப்பட்டது. அப்போது எஸ் 2 கோச் கழிவறை கதவு மூடப்பட்டிருந்தது. கழிவறை கதவு திறக்கப்படும் என்று பயணிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஒரு மணி நேரமல்ல. ஒரு நாளும் கடந்தது. 2 வது நாளும் கடந்தது.
ஆனாலும் அந்த கழிவறையின் கதவு திறக்கப்படவே இல்லை. இதற்கிடையே ரயில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஸ்டேஷனுக்கு அருகில் வந்து கொண்டிருந்தது. கழிவறை கதவு திறக்கப்படாதது குறித்து எஸ்-2 கோச்சில் பயணம் செய்த பயணிகள் டிக்கெட் பரிசோதகரிடம் தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து டிக்கெட் பரிசோதகர் அரக்கோணம் ஆர்பிஎப் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். ரயில் அரக்கோணம் ஸ்டேஷனில் மதியம் 2 மணி 6 நிமிடங்களுக்கு வந்து நின்றது. இதைத் தொடர்ந்து கையில் ஸ்க்ரூ டிரைவர் மற்றும் சுத்தியலுடன் தயாராக நின்று கொண்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் தெய்வநாயகம் தலைமையிலான போலீசார் மற்றும் ரயில்வே ஊழியர்கள் அரக்கோணத்தில் எஸ் -2 கோச்சில் ஏறி கதவை திறக்குமாறு தொடர்ந்து தட்டினர்.