வேலூர்: ஆண்டுதோறும் சித்திரை மாத பௌர்ணமி தினத்தில் வேலூரில் புஷ்ப பல்லக்குகள் பவனி வரும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் நடப்பு ஆண்டு சித்ரா பௌர்ணமி விழா கொண்டாடப்பட்டது. இதனை ஒட்டி, புஷ்ப பல்லக்குகள் ஊர்வலம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
இந்த விழாவில் அரிசி மண்டி உரிமையாளர்கள் சார்பில் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோயில் புஷ்ப பல்லக்கு, வெல்லமண்டி உரிமையாளர்கள் சார்பில் தோட்டப்பாளையம் தாரகேஸ்வரர் கோயில் புஷ்ப பல்லக்கு, பூ மார்க்கெட் தொழிலாளர்கள் சார்பில் லாங்கு பஜார் வேம்புலி அம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு, மோட்டார் வாகன பணியாளர்கள் சங்கம் சார்பில் விஷ்ணு துர்க்கை அம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு, வாணியர் வீதி சுந்தர விநாயகர் கோயில் புஷ்ப பல்லக்கு, புஷ்ப கமிஷன் வியாபாரிகள் சார்பில் வேம்புலியம்மன் கோயில் புஷ்ப பல்லக்கு, புஷ்ப தொழிலாளர்கள் சார்பில் அரசமரப்பேட்டை லட்சுமி நாராயண சுவாமி கோயில் புஷ்ப பல்லக்கு உள்பட 9 புஷ்ப பல்லக்குகள் ஊர்வலத்தில் பங்கேற்றன.