தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவல் துப்பறியும் பிரிவுக்கு புதுவரவு: பெண் மோப்ப நாய் 'சாரா' சேர்ப்பு! - துப்பறியும் நாய்

வேலூர் மாவட்ட காவல் மோப்ப நாய் பிரிவில், சாரா என்ற பெண் நாய் பணியில் சேர்க்கப்பட்டது.

Dog
மோப்ப நாய்

By

Published : Jun 2, 2023, 6:45 PM IST

வேலூர்:கொலை, கொள்ளை போன்ற குற்றச்சம்பவங்களின் போது தடயங்களை சேகரிக்க மோப்ப நாய்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் இயற்கை சீற்றங்களின் போதும், தேடுல் பணிக்கு மோப்ப நாய்களின் உதவி மிகவும் இன்றியமையாதது. அந்த வகையில், வேலூர் மாவட்ட காவல் மோப்ப நாய் பிரிவில் கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் துப்பறியும் பணியை மேற்கொண்ட ஷிம்பா என்ற மோப்ப நாய், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது.

இதையடுத்து கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் துப்பறிவதற்காக சாரா என்ற பெண் மோப்ப நாய் வாங்கப்பட்டது. அந்த நாய்க்கு வேலூரில் 6 மாதங்கள் அடிப்படை பயிற்சி அளிக்கப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் செயின்ட் தாமஸ் மவுண்ட் மோப்ப நாய் பிரிவு தலைமையகத்தில் கடந்த 6 மாதங்கள் சாராவுக்கு சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்நிலையில் அனைத்து பயிற்சிகளும் நிறைவடைந்ததை தொடர்ந்து, மோப்ப நாய் சாரா, வேலூர் மாவட்ட காவல் மோப்ப நாய் பிரிவில் முறைப்படி இன்று (ஜூன் 2) முதல் பணியில் சேர்க்கப்பட்டது. இதற்கான சான்றிதழை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் வழங்க, மோப்ப நாய் பயிற்சியாளர்கள் சசிக்குமார், வெங்கடேசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இதுகுறித்து மோப்ப நாய் பயிற்சியாளர்கள் கூறுகையில், "வேலூர் மாவட்ட மோப்ப நாய் பிரிவில், குற்றச்சம்பவங்களில் துப்பறிய ஷிம்பா என்ற மோப்ப நாயும், வெடிகுண்டுகள் தொடர்பாக துப்பறிந்திட அக்னி, லூசி ஆகிய மோப்ப நாய்களும் இருந்தன. இதில், லூசி மோப்ப நாய் கடந்த ஓராண்டுக்கு முன்பு ஓய்வு பெற்றது. ஷிம்பா கடந்த நவம்பர் மாதம் புற்றுநோயால் உயிரிழந்தது. இதையடுத்து, சாரா, ரீட்டா ஆகிய இரு மோப்ப நாய்கள் வாங்கப்பட்டு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தன.

இதில், குற்றச்சம்பவங்களில் துப்பறிவதற்காக வாங்கப்பட்ட சாரா என்ற பெண் மோப்ப நாய் ஜெர்மன் ஷெப்பர்டு இனத்தைச் சேர்ந்தது. கோவையில் மூன்று மாத குட்டியாக வாங்கப்பட்ட இந்த மோப்ப நாய்க்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வேலூர் மாவட்ட காவல் மோப்பநாய் பிரிவில் முறைப்படி பணியில் சேர்க்கப்பட்டுள்ளது. பணியில் இந்த நாய் சிறப்பாக செயல்படும் என நம்புகிறோம். இதேபோல், வெடிகுண்டு சம்பவங்களில் துப்பறிந்திட வாங்கப்பட்ட ரீட்டா மோப்ப நாய்க்கு வேலூரில் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் சென்னை தலைமையக சிறப்புப் பயிற்சிக்காக அனுப்பப்பட உள்ளது" என கூறினார்

இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட காவல் மோப்பநாய் பிரிவின் காவல் உதவி ஆய்வாளர் ஜெரால்டு வில்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: ஒடிசாவில் இருந்து ரயில் மூலம் 19 கிலோ கஞ்சா கடத்தல்.. தாம்பரத்தில் சிக்கிய இளைஞர்!

ABOUT THE AUTHOR

...view details