வேலூர்:வளர்ந்து வரும் விஞ்ஞான உலகிற்கு ஏற்ப புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தரமான பொருட்களை தயாரிக்க மாணவர்கள் முன் வர வேண்டும் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவு தலைவர் விஞ்ஞானி எஸ்.கே. வர்ஷ்னி அறிவுறுத்தி உள்ளார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 'தேசிய அறிவுசார் விழா' கடந்த 22 ஆம் தேதி துவங்கியது. இதில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட இந்திய மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் அறிவியல் தொழில்நுட்பத்தின் புதிய கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியின் நிறைவு விழா நேற்று (செப். 24) மாலை விஐடி பல்கலைக்கழக துணைத் தலைவர் ஜி.வி செல்வம் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சர்வதேச ஒத்துழைப்பு பிரிவு தலைவர் விஞ்ஞானி எஸ்.கே. வர்ஷ்னி பங்கேற்று பேசினார்.
அப்போது பேசிய அவர், "பொறியியல் மாணவர்கள் புத்தகத்தை தவிர வெளிப்படையான புதிய அறிவியல் தொழில்நுட்பத்துடன் கூடிய அறிவுத்திறமையை கற்றுக் கொள்ள முன் வர வேண்டும். நாட்டில் தற்போது புதிய கண்டுபிடிப்புகள் அதிகரித்து வருகிறது. மாணவர்கள் புதிய தொழில்நுட்பத்தில் கருவிகளை உருவாக்கப்படும் பொழுது அவை தரமானதாக இருக்க வேண்டும்.
புதிய பொருட்களை உருவாக்கப்படும் போது மாணவர்கள் எப்பொழுதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அப்பொழுது தான் பொருட்களின் உற்பத்தி, மற்றும் தரம் அதிகரிக்கும். இன்றைக்கு நாட்டில் பல்வேறு புதிய பொருட்கள் உற்பத்தி சந்தைகளில் காணப்படுகின்றன.