தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிறைவேறாமல் போன நளினியின் கனவு! - அத்தி வரதர்

வேலூர்: அத்தி வரதரை தரிசிக்க அனுமதி கோரிய நளினியின் மனுவை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு காரணம் காட்டி நிராகரித்துள்ளார்.

நளினி

By

Published : Aug 17, 2019, 4:31 AM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன் உட்பட 7 பேர் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில், நளினி தனது மகள் திருமணத்திற்காக ஜூலை மாதம் 25ஆம் தேதி ஒரு மாத பரோலில் வெளியே வந்தார். அவர் தற்போது வேலூர் ரங்காபுரம் அடுத்த புலவர் நகர் பகுதியில் திராவிடர் கழக நிர்வாகி ஒருவர் வீட்டில் வசித்து வருகிறார்.

பாதுகாப்பிற்காக நளினி தங்கியுள்ள வீட்டை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் நளினி வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர், "நான் 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து தற்போது பரோலில் வெளியே வருகிறேன். எனக்கு 54 வயது ஆகிறது. காஞ்சிபுரம் அத்தி வரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை அருள்பாலிக்கக் கூடியவர்.

தற்போது அவரை பல கோடி மக்கள் நேரில் வணங்கி வருகின்றனர். அடுத்த நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. எனவே, அத்தி வரதரை தரிசிக்க அனுமதி வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மனுவை விசாரித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு கருதி நளினியை காஞ்சிபுரம் அத்தி வரதர் தரிசனத்திற்கு அனுப்ப முடியாது என்று மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. நளினி தனது விடுதலைக்காக பல்வேறு வழிகளில் முயற்சி செய்து வரும் நிலையில், அத்தி வரதர் மூலமாக தனக்கு விடிவு காலம் பிறக்கும் என்று நம்பி இருந்ததாக தெரிகிறது. ஆனால், தற்போது அந்த எண்ணமும் நிறைவேறாமல் போனது அவரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details