தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நளினியின் மகள் திருமணத்தில் தாமதம் ஏன்? பரபரப்பு தகவல்கள்! - nalini parol

வேலூர் : நளினி மகள் திருமணம் தாமதம் ஆவது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவலர்களின் பாதுகாப்பில் நளினி.

By

Published : Sep 14, 2019, 10:10 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 28ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, தனது மகள் திருமணத்திற்காக பரோல் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனது மகளின் திருமணத்திற்காக பரோலில் வெளிவந்த நளினி.

இதையடுத்து, கடந்த ஜூலை மாதம் 25ஆம் தேதி வேலூர் மத்திய பெண்கள் சிறையில் இருந்து பலத்த காவல் துறையினரின் பாதுகாப்புடன் நளினி வெளியே வந்தார். அவர் வேலூர் வள்ளலார் அடுத்த புலவர் நகரில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை நிர்வாகி சிங்கராயர் இல்லத்தில் வசித்துவருகிறார்.

தனது மகள் திருமணத்தை நேரில் பார்ப்பதற்காகவே பரோலில் அவர் வெளிவந்தார். ஆனால் அவரது மகள் திருமணம் தொடர்பாக எந்த ஒரு நிகழ்வும் நடக்கவில்லை.

இதுகுறித்து நளினி தரப்பில் விசாரித்தபோது, நளினியை சந்திப்பதற்கு காவல் துறையினர் கடும் கெடுபிடி விதித்துள்ளனர், உறவினர்கள் யாரும் வந்தால்கூட கடுமையான சோதனைகளுக்கு பிறகே வீட்டிற்குள்ளே அனுப்புகின்றனர். இதுபோன்ற காரணங்களால் அவரது மகளுக்கு மாப்பிள்ளை பார்ப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பரோலில் வெளிவந்த நளினி

மேலும், மாப்பிள்ளை வீட்டார்கள் காவல் துறையின் கெடுபிடியை கண்டு திருமணத்திற்கு சம்மதிக்க அச்சப்படுகின்றனர். இந்த காரணத்தால் திருமண ஏற்பாட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நளினியின் கணவர் முருகன் தற்போது சிறையில்தான் உள்ளார் இலங்கையில் உள்ள முருகனின் தந்தைக்கு உடல் நலம் சரியில்லை. திருமணம் தாமதம் ஆக இதுவும் ஒரு காரணம்" என கூறப்பட்டது..

இருப்பினும் திருமணத்தில் ஏற்பட்ட தாமதத்துக்கு வேறு சில காரணங்களும் இருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது குறிப்பாக நளினியின் மகள் தனக்கு தற்போது திருமணம் வேண்டாம் தனது தாய், தந்தை இருவரும் நிரந்தர விடுதலை அடைந்து வெளியே வந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வேன் என்று அடம்பிடிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நளினியின் பரோல் கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்தது, நாளை மாலை மீண்டும் நளினி வேலூர் மத்திய பெண்கள் சிறைக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்படுகிறார். நளினியின் மகளுக்கு தற்போது வரை திருமணம் நிச்சயம் ஆகாததால் மிகுந்த ஏமாற்றத்துடன் நளினி சிறைக்குச் செல்ல உள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details