முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேர், கடந்த 25 வருடங்களுக்கு மேலாக சிறை தண்டனை பெற்று வருகின்றனர். அவர்களில் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி வேலூர் மகளிர் சிறையிலும் இருந்து வருகின்றனர். இந்த சூழலில் 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு ஆளுநருக்கு பரிந்துரைக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் உடனடியாக தமிழக அமைச்சரவை கூடி 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பியது. ஆனால் கடந்த 5 மாதங்களாக அந்த கடிதம் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறார். அவரது இந்த செயலுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட பலர் தங்களது கண்டனத்தை எழுப்பி வருகின்றனர். இருப்பினும் ஆளுநர் வழக்கமான மௌனத்தையே கடைபிடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து, 7 பேரையும் விடுதலை செய்ய கோரி தமிழக ஆளுநருக்கு முருகன் சமீபத்தில் கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார் அதில் ஒன்று எங்களை விடுதலை செய்யுங்கள் அல்லது கருணைக் கொலை செய்ய அனுமதியுங்கள் என்று உருக்கமாக எழுதியிருந்தார். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முருகன் கடந்த 2-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டமும் நடத்தி வருகிறார்.
அதேபோல் அவரது மனைவி நளினியும் ஆளுநர் பன்வாரில் புரோஹித்துக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில், பல்வேறு விவகாரங்களை உருக்கமாக தெரிவித்து இந்த முறை உண்ணாவிரதத்தை கைவிடப்போவதில்லை என தீர்க்கமாக கூறி கடந்த சனிக்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி கடந்த 3 நாட்களாக நளினி சிறையில் உணவு உண்ணவில்லை.
இந்நிலையில், தொடர்ந்து 4-வது நாளாக நளினி தனது உண்ணாவிரதத்தை தொடர்ந்து வருகிறார். 3-வது நாளான நேற்று உணவு உட்கொள்ளாததால் நளினி திடீரென மயக்கம் போட்டு விழுந்ததாகவும் அவரை சிறையில் உள்ள மருத்துவமனையில் சிறைக்காவலர்கள் அனுமதித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது வழக்கறிஞர் புகழேந்தியிடம் கேட்டபோது, "தனது கோரிக்கையில் உறுதியாக நளினி உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் உணவு எதுவும் சாப்பிடாததால் திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதையடுத்து சிறை மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். அங்கு அவருக்கு குளுக்கோஸ் ஏற்ற மருத்துவர்கள் முயற்சித்தனர். ஆனால் நளினி அதையும் ஏற்க மறுத்துவிட்டார். கோரிக்கை நிறைவேறும்வரை எந்த சிகிச்சையும் மேற்கொள்ள மாட்டேன் என்று உறுதியாக கூறியுள்ளார். இதையடுத்து சிறையிலிருந்து வெளியே அழைத்து அடுக்கம்பாறை உள்ள அரசு தலைமை மருத்துவமனைக்கு நளினியை அழைத்துச் செல்ல சிறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது" என தெரிவித்தார்.