முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நளினி, அவரது கணவன் முருகன் ஆகியோர் தனித்தனியே வேலூர் ஆண்கள் சிறையிலும் வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்த 28 ஆண்டுகளாக தனது கணவன், மகளைப் பிரிந்து வாழ்வதால் தங்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என நளினி தொடர்ந்து மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துவருகிறார். ஆனாலும் இதுவரை இவர்களது விடுதலை தொடர்பாக ஆளுநர் எந்த ஒரு முடிவும் எடுக்காமல் இருந்துவருகிறார்.
இந்நிலையில் தங்களை விடுதலை செய்யக்கோரியும் சிறையில் தனது கணவன் முருகனை தனிமைப்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பட்டினிப் போராட்டம் நடத்தப்போவதாக சிறை அலுவலர்களிடம் கடந்த வாரம் நளினி மனு அளித்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஐந்து நாள்களாக நளினி சிறைக்குள் பட்டினிப் போராட்டம் நடத்திவருகிறார். இதனால் நளினியின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. எனவே பட்டினிப் போராட்டத்தைக் கைவிடக்கோரி சிறை அலுவலர்கள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை அவர் கைவிடவில்லை. இதையடுத்து தினமும் நளினியை சிறை மருத்துவர்கள் பரிசோதித்துவருகின்றனர்.