வேலுார்:இந்திய ரிசர்வ் வங்கி(RBI) 2,000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறப்போவதாக அறிவித்த நிலையில் பத்து ரூபாய் காயின் மாறுமா என்ற ஏக்கத்தில் பாமர மக்களும், கள்ளதனமாக 2000 ரூபாய்களை பதுக்கி வைத்துள்ள மக்களும் பணத்தை எப்படி மாற்றுவது என அல்லாடி வருகிறனர்.
இந்த சூழலில் 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றி தருகிறோம் என்று மோசடி கும்பல்கள் பலவும் கிளம்பியுள்ளது. இவர்களின் நடமாட்டம் அதிகரித்து வரும் நிலையில் கோவையை தொடர்ந்து வேலூரில் ஓர் மோசடி கும்பல் சிக்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த ஞானபிரகாஷ் (26) ஒப்பந்ததாரர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த டிராவல்ஸ் அதிபர் முகமது ஜமீல் ஆகிய இருவரிடம் செல்போனுக்கு ஒரு மர்ம நபர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் பெங்களூரில் இருந்து பேசுவதாகவும் 500 ரூபாய் நோட்டுக்களை கொடுத்தால் அதற்கு ஈடாக 2,000 ரூபாய் நோட்டுக்களை தருவதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
அதிக பணம் கிடைக்கும் என்ற ஆசையில் ஞானபிரகாஷ் 25 லட்சம் ரூபாயையும் முகமது ஜமீல் 12 லட்சம் ரூபாயையும் ஏற்பாடு செய்துள்ளனர். பின் பணம் தருவதாக கூறிய நபரை தொடர்பு கொண்டு பணம் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளனர். மீன் தூண்டிலில் மாட்டியதால் மகிழ்ந்த அந்த மர்ம நபர் 2,000 ரூபாய் நோட்டுகளை தரும் தனது நண்பருடன், வேலுாரில் வைத்து பெற்று கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அதன்படி இருவரும் பணத்துடன் வேலுாருக்கு வந்துள்ளனர். அங்கு ஆள்நடமாட்டம் குறைவாக இருந்த பைபாஸ் சாலையில் இருவரிடம் இருந்தும் பணத்தை பெற்றுக்கொண்ட கும்பல் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்த நிலையில் ஒரு வாகனத்தில் வந்த அதே கும்பலைச் சேர்ந்த மர்ம நபர்கள் தங்களை போலீசார் என அறிமுகம் செய்து கொண்டு அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். உண்மையான போலீசார் என்ற பயத்தில் இருவரும் பணத்தை மாற்ற வந்த தகவலை அவர்களிடம் கூறியுள்ளனர்.
பணம் மாற்றுவது குற்றச்செயல் என கண்டித்த அந்த கும்பல் பணத்தை பறிமுதல் செய்வது போல் நடித்து வேலுார் வடக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து உரிய ஆவணத்தை காட்டி பணத்தை பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. பணத்தை பறிகொடுத்த இருவரும் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு சென்று பணத்தை பற்றி கேட்ட போது அங்கிருந்த போலீசார் தாங்கள் யாரும் அவ்வாறு பணம் பெறவில்லை என கூறியுள்ளனர்.
இந்நிலையில் மர்ம கும்பலிடம் ஏமாந்ததை உணர்ந்த இருவரும் இதுகுறித்து வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தி வரும் போலீஸார் இவர்கள் கூறும் தகவல் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் இது தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த டேனியல், அருண்குமார், அம்ரோஸ் மற்றும் கிருஷ்ணகிரியை சேர்ந்த கண்ணன் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 15 வருடங்களாக போலி பாஸ்போர்ட் தயாரித்து விற்பனை செய்த நபர் கைது!