தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெயரில் தொடங்கி சிப்பாய் கலகம் வரை... வேலூருக்கும் திப்பு சுல்தானுக்குமான தொடர்பு! - velur fort

இந்திய விடுதலைப் போராட்டத்தில் வீர வரலாறு படைத்த மாவீரன் திப்பு சுல்தானுக்கும் வேலூருக்கும் இடையே உள்ள வரலாற்று பக்கங்கள் குறித்த இங்கே பார்க்கலாம்....

திப்பு சுல்தான்
திப்பு சுல்தான்

By

Published : Dec 7, 2020, 10:14 AM IST

Updated : Dec 9, 2020, 9:08 PM IST

இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த திப்பு சுல்தான், ஒரு சாதாரண வீரராக வாழ்க்கையை தொடங்கி மைசூரின் மன்னராக உயர்ந்த ஹைதர் அலியின் மகன். இவருக்கு 'மைசூரின் புலி' என்ற பெயரும் உண்டு. நவம்பர் 20, 1750இல் பெங்களூரு தேவனஹல்லியில் பிறந்த திப்பு சுல்தான், தந்தையை போலவே ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து, கடைசி மூச்சு நிற்கும்வரை ஆங்கிலேயர்களை மாவீரத்துடன் எதிர்த்து போராடினார்.

கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு பெரும் சவாலாக இருந்தார். இளம் வயதிலேயே திறமைப்பெற்ற போர் வீரனாக வளர்ந்த அவர், சிறந்த ஆட்சியாளராகவும், நிர்வாகியாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும் விளங்கினார்.

1782 முதல் 1799 வரை மைசூர் பேரரசை ஆட்சி செய்த திப்பு சுல்தான், உலகத் தரத்திலான ராணுவத்தை உருவாக்கி இருந்தார். போர்க்களத்தில் ஏவுகணையை உலகிலேயே முதல்முதலில் பயன்படுத்தியவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரும், இவர்தான்.

இந்த தகவல் எல்லாம் திப்பு சுல்தான் குறித்து நாம் பலரும் அறிந்திருக்கலாம், ஆனால் காலத்தால் மறைக்கப்பட்ட இவருடைய வரலாற்று பக்கங்கள் பல உள்ளன. அதில் ஒன்றுதான் தமிழ்நாட்டில் உள்ள வேலூருக்கும் திப்பு சுல்தானுக்குமான தொடர்பு.

திப்பு சுல்தானுக்கும் வேலூருக்குமான தொடர்பு குறித்து நம்மிடம் விவரிக்கிறார் வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன், "வேலூருக்கும் திப்பு சுல்தானுக்குமான தொடர்பு அவரது பிறப்பிற்கு முன்பிருந்தே தொன்றுதொட்டு வருகிறது. மைசூர் மன்னர் ஹைதர் அலி அவரது மனைவி ஃபக்ருன் நிஷா தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தை பேரு இல்லாததால், வேலூரை அடுத்த ஆற்காடு அருகே உள்ள "திப்பு மஸ்தான் அவுலியா" என்கிற இஸ்லாமிய சூஃபி ஞானியிடம் வேண்டியதாகவும், அவர் அளித்த அருள் வாக்கு மூலம் தான் திப்பு சுல்தான் பிறந்ததாகவும் செவி வழி செய்தியாக சொல்லப்படுகிறது. இவரது நினைவாகத்தான் ஹைதர் அலி தனது மகனுக்கு திப்பு சுல்தான் என்று பெயரிட்டார் என்றும் கூறப்படுகிறது.

வேலூர் மாவட்டத்தின் பிரதானமான அடையாளங்களில் ஒன்றான வேலூர் கோட்டையில், திப்பு சுல்தானுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நான்கு மைசூர் போர்கள் நடைபெற்றுள்ளன. 1799இல் நடைபெற்ற கடைசி மைசூர் போரின் போது திப்பு சுல்தான் கொல்லப்படுகிறார். திப்பு ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் என்பதால், இவரது குடும்ப உறுப்பினர்களில் இருந்து மீண்டும் யாரேனும் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உருவாகி விடக்கூடாது என்பதற்காக ஶ்ரீரங்கப்பட்டிணத்தில் இருந்த திப்பு சுல்தானின் குடும்ப உறுப்பினர்களோடு சேர்த்து 1378 பேரை சிறை பிடித்து வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்கள் அடைத்து வைத்தனர். திப்பு குடும்பத்தில் இருந்த ஆண்கள் பாதுஷா மஹாலிலும், பெண்கள் பேகம் மஹாலில் அடைத்து வைக்கப்பட்டனர்.

வேலூருக்கும் திப்பு சுல்தானுக்குமான தொடர்பு

திப்புவின் மூத்த மகானான ஃபத்தே ஹைதரும், மூன்றாவது மகனான முஹையுத்தீன் இருவரும் இணைந்து ஜூலை 10, 1806 அதிகாலை 2 மணிக்கு வேலூர் கோட்டையில் பறந்து கொண்டிருந்த ஆங்கிலேய ஜாக் கொடியை இறக்கி திப்பு சுல்தானின் புலிக்கொடியை ஏற்றினர். சிப்பாய் கலகத்திற்கு இது ஒரு முக்கிய காரணமாக இருந்ததால், ஆங்கிலேயர்கள் திப்புவின் குடும்பத்தார் பெரும்பாலானோரை கல்கத்தா சிறைகளில் அடைத்தனர்.

வேலூரில் இருந்து உயிரிழந்த திப்பு சுல்தானின் மகள் பாத்திமா பேகம், திப்புவின் மருமகன் மீர்ஜராஜா மற்றும் திப்புவின் பல உறவினர்கள் சமாதிகள் வேலூர் ஆற்காடு சாலையில் அமைந்துள்ளது” என்கிறார்.

திப்பு சுல்தான் என்றால் மைசூரை சேர்ந்தவர் என்று மட்டுமே நம் நினைவுக்கு வரும் வேளையில், நாட்டின் முதல் சுதந்திர போராட்டம் நடைபெற்ற வேலூரிலும் திப்பு சுல்தானின் வரலாற்று தடங்கள் பதிந்துள்ளன என்பது நமக்கு எல்லாம் பெரும் தரும் விஷயம் தானே!

Last Updated : Dec 9, 2020, 9:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details