ஈரோடு இடைத்தேர்தல்; ஒன்றிய அரசின் குறைகளைக் கூறி வாக்கு சேகரிப்போம் - முத்தரசன் பேச்சு Erode East By Poll: வேலூர்:ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் நீதி மய்யம் ஆதரவு அளித்துள்ளது வரவேற்கத்தக்கது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று (ஜன.25) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், 'ஒன்றிய அரசு அரசியல் அமைப்பு சட்டத்தை கூட மதிக்காமல் செயல்படுகிறது. நாட்டின் துணை குடியரசு தலைவரே கருத்து தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது.
'ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழி' போன்றவற்றையெல்லாம் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். பாஜக தேர்தல்களில் சரிவுகளை சந்தித்து வருகிறது. அதற்கு மக்கள் தகுந்த பாடங்களை புகட்டுவார்கள். தமிழ்நாடு ஆளுநர் தேநீர் விருந்திற்கு எங்களையும் மரியாதையுடன் அழைத்திருந்தார்.
ஆனால், அவர் ஆளுநராக செயல்படவில்லை என்பதால் நாங்கள் அதனை புறக்கணிக்கிறோம். யார் தேநீர் விருந்திற்கு சென்றாலும் கவலையில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் அரசுக்கு திருப்பி அனுப்பி மீண்டும் அவர் கேட்ட விளக்கங்களை தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ளது.
எனவே, உடனடியாக அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அப்போது தான், உயிரிழப்புகள் தடுக்கப்படும். வரும் பிப்.27-ல் நடக்க உள்ள ஈரோடு இடைத்தேர்தல் குறித்து அறிவித்தவுடன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிகளை மதித்து அழைத்து பேசி அதனை காங்கிரஸுக்கே தந்துள்ளது, எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
காங்கிரஸிற்கே வெற்றி:ஈரோடு தேர்தலில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத போக்கினை எடுத்துக்கூறியும், தமிழ்நாடு அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து காங்கிரஸுக்கு வெற்றியைத் தேடி தருவோம். நெய்வேலி சுரங்கத்திற்கு மீண்டும் நிலங்கள் கையகப்படுத்தும்போது, அங்குள்ள விவசாயிகளை அழைத்து பேசி, அவர்களின் கருத்தைக்கேட்டு தான் நிலங்களை கையகப்படுத்த வேண்டும். தமிழ்நாடு அரசும் இதில் தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். இல்லையென்றால், மக்களை திரட்டிப் போராட்டம் நடத்துவோம்.
அண்ணாமலை கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை படியுங்கள்: தமிழ்நாட்டில் பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடும் என முதலில் அறிவித்தார்கள். தற்போது, பாஜக ஓடி ஒளிந்து கொண்டது; அண்ணாமலை, கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களை முழுமையாக படிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டுமென நாங்கள் கடந்த காலங்களில் போராடினோம். இப்போதும் பழைய ஓய்வூதியம் கொண்டு வர முதலமைச்சரை கேட்டுள்ளோம். நிதிநிலை சீரானால் வழங்குவதாக கூறியுள்ளார்.
மாதம் ரூ.1,000:இதேபோல் தான், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டமும் நிலுவையில் உள்ளது. குஜராத் சம்பவம் குறித்து பிபிசி ஆவண படம் வெளியிட்டதை இந்த அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி தடை விதித்துள்ளது கண்டிக்கதக்கது' என்று கூறினார். பேட்டியின்போது, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லதா, மாவட்ட செயலாளர் சாமிக்கண்ணு ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸை ஏன் ஆதரிக்கிறோம்?: கமலின் விளக்கம்