வேலூர்:முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்து வருபவர், முருகன்.
இவரது சிறை அறையிலிருந்து கடந்த 2019ஆம் ஆண்டு, சிறைக்காவலர்கள் சோதனையின்போது ஒரு செல்போன், பேட்டரி, சிம்கார்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேலூர் மத்திய சிறைத் துறை சார்பில் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
அப்புகாரின் அடிப்படையில் மூன்று பிரிவுகளின்கீழ் முருகன் மீது பாகாயம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கானது வேலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கரோனா தொற்று காரணமாக, முருகனிடம் காணொலி காட்சி மூலம் வழக்கு விசாரணை செய்துவந்தனர்.
இதனையடுத்து தற்போது கரோனா தொற்று கட்டுக்குள் வந்து ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தன்னை நேராக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி முருகன் சிறைத்துறை அலுவலரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து நீதிமன்ற அனுமதி பெற்று, வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகனை பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இன்று(நவ.9) வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் காவல் துறையினர் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி முகிலாம்பிகை, வரும் நவம்பர் 15ஆம் தேதியன்று மீண்டும் முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:கவுண்டன்ய ஆற்றின் கரையோரம் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை