முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் மத்திய சிறையில் உள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் 18ஆம் தேதி அவரது அறையிலிருந்து செல்ஃபோன் மற்றும் சிம்கார்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக முருகன் மீது காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
செல்ஃபோன் பறிமுதல் செய்த விவகாரத்தைக் காரணம் காட்டி தன்னை தனிச்சிறையில் வைத்து சித்ரவதை செய்வதாகவும் உணவு அருந்தவிடாமல் கொடுமை படுத்துவதாகவும் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது முருகன் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
தன்னை தனிச்சிறையிலிருந்து பழைய சிறைக்கு மாற்றக்கோரி 15 நாட்களுக்கு மேலாக முருகன் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். பிறகு சில தினங்களுக்கு முன்பு சிறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு முருகன் உண்ணாவிரதத்தைக் கைவிட்டார்.