வேலூர்:குடியாத்தம் அடுத்த ஒலக்காசி பகுதியில் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் எடுக்கும் செல்வராஜ் (30) என்பவர் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் உயிரிழந்து கிடப்பதாக பொதுமக்கள் குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பெயரில் விரைந்து வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் தீபாவளி நாளன்று குடியாத்தம் ரயில்வே ஸ்டேஷன் அருகே இருக்கும் பெட்ரோல் பங்கில் மாட்டு வண்டியில் மணல் எடுக்கும் கும்பலுக்கும் மற்றொரு கும்பலுக்கும் மது போதையில் தகராறு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் அரங்கே இருக்கலாம் என சந்தேகித்த போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகளில் பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். மேலும், அந்த சிசிடிவி காட்சிகளில் இருந்த மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.