தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாமானியர்கள் மீது அராஜகம்: வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையர் - தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி

திருப்பத்தூர் : கோயம்பேடு போல் கோவிட்-19 சமூகத் தொற்றாக வாணியம்பாடியில் பரவக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பழங்கள், காய்கறிகளை சாலையில் வீசினேன். அதற்காக வருந்துகிறேன் என நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தெரிவித்துள்ளார்.

Municipality commissioner apology for his behavior
கனிமொழி கண்டனம் - வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ்!

By

Published : May 13, 2020, 10:52 AM IST

Updated : May 13, 2020, 12:00 PM IST

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க, தற்போது மூன்றாவது முறையாக மே 17ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் (மே.10) முதல் தமிழ்நாடு அரசு 34 வகையான சிறு, குறு தொழில் நிறுவனங்கள் இயங்குவதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் நான்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர, மற்ற பகுதிகளில் வழக்கம்போல் கடைகள் இயங்கத் தொடங்கின.

இந்நிலையில், நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் தலைமையில், நகராட்சி ஆணையர் அனைத்து பகுதிகளிலும் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இயங்கி வந்த ஒரு சலூன் கடை உள்பட 4 கடைகளுக்கு வருவாய்த் துறையினர் பூட்டுப்போட்டனர். தகுந்த இடைவெளியைப் பின்பற்றாமல் காய்கறி, பழங்கள் விற்பனை செய்து வந்தாகக் கூறி தள்ளு வண்டிகளை பறிமுதல் செய்த, நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், அவற்றை சாலையில் தூக்கி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காய்கறி, பழங்களை விற்பனை செய்த கடைகள், சாலையோர தள்ளுவண்டி கடைகளையும், அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பழங்கள், பொருள்களை சாலையில் வீசியும், தள்ளு வண்டி கடைகளை கீழே தள்ளியும் அடாவடியில் ஈடுபட்டார்.

இது தொடர்பாக திமுக மகளிர் அணித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், “வாணியம்பாடி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஏழை வியாபாரிகள் என்றால் அவ்வளவு இளக்காரமா ? எளியவர்களிடம் மட்டுமே இவர் போன்றவர்களின் அதிகாரக் கரங்கள் அத்துமீறும். எச்சரிக்கை செய்வதை விடுத்து, இப்படி உணவுப் பொருள்களை கொட்டி கவிழ்க்க யார் அதிகாரம் தந்தது? இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்”என கூறியிருந்தார்.

வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையாளர் சிசில் தாமஸ்

மேலும், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காவல்துறை கண்காணிப்பாளர் விஜயகுமார், “நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் ஒரு நேர்மையான அர்ப்பணிப்புள்ள அலுவலர். அவர் கோவிட் -19 பரவலைத் தடுக்கும் பணியில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுவந்தவர். நேற்று நடைபெற்ற அந்த நிகழ்வு துரதிர்ஷ்டவசமானது. இது தொடர்பாக் விசாரணை மேற்கொள்ளப்படும்”என தெரிவித்துள்ளார்.

நகராட்சி ஆணையர் சிசில் தாமஸின் இந்த அடாவடித்தனமான செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களிடம் நேரில் சென்று வருத்தம் தெரிவித்த நகராட்சி ஆணையர்

எதிர்ப்புகள் வலுவடைந்து வந்த நிலையில் இன்று ஊடகங்களை சந்தித்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ், “சென்னை கோயம்பேடு மார்க்கெட் போல் கரோனா வைரஸ் சமூக தொற்றாக பல்வேறு பகுதிகளில் பரவக்கூடிய நிலை வாணியம்பாடி பகுதியிலும் ஏற்படக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் இச்செயலை செய்துவிட்டேன். இதற்காக வருந்துகிறேன்” என்றார். மேலும், அவரது நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட தள்ளுவண்டி கடைகள் உரிமையாளர்களிடம் நேரில் சென்று வருத்தங்களை தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க :பழங்கள், காய்கறிகளை சாலையில் வீசிய நகராட்சி அலுவலர் செயலுக்கு கண்டனம்!

Last Updated : May 13, 2020, 12:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details