வேலூர்:சத்துவாச்சாரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு எதிர்ப்புறம் உள்ள தேசிய நெடுஞ்சாலையைப் பொதுமக்கள் கடக்கும் போது, எதிர்பாராதவிதமாக விபத்துகள் ஏற்பட்டு அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன.
இதனைத் தடுக்கும் வகையில், அப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு 2020ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி அன்றைய வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் பூமி பூஜை போடப்பட்டது.
சுமார் ரூ. 1.80 கோடி மதிப்புள்ள இந்த சுரங்கப்பாதைப் பணியானது பாதசாரிகள் மட்டும் நடந்து செல்லும் வகையில் 5.05 மீட்டர் உயரமும் 2.6 மீட்டர் அகலத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது. ஆறு மாதத்தில் முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. இந்தத் திட்டம் பல்வேறு காரணங்களால் ஓராண்டு கழித்து நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில், வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த், இந்த சுரங்கப்பாதையினை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று (ஜன 26) திறந்து வைத்தார்.